விஜய் - திருமாவளன் 
செய்திகள்

“தவெக உடனான கூட்டணி கதவை மூடினேன்”- திருமா

Staff Writer

“தவெகவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கதவையும் நான் மூடினேன்.” என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு

புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து அவர் பேசியதாவது;

"பாமக, பாஜக இடம் பெற்றுள்ள கூட்டணியில் விசிக இடம்பெறாது. அதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை.

விஜய் கலந்துகொண்ட விகடன் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டால் குழப்பம் வந்துவிடும் என்பதனாலும், அது பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதனாலும் அந்த விழாவையே புறக்கணித்தவன் திருமாவளவன். தவெகவுடன் சேரும் வாய்ப்பும் எங்களுக்கு இருந்தது. ஆனால் அந்த கதவையும் நான் மூடினேன்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் துணை முதல் அமைச்சர் பதவி கேட்கலாம், கூடுதலாக 3 அல்லது 4 அமைச்சர் பதவியையும் கேட்கலாம் என்று சிலர் ஆசை காட்டியது உண்டு.

நீங்கள் நினைக்கிற சராசரி அரசியல்வாதி அல்ல இந்த திருமாவளவன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்திவிட முடியாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.