நத்தம் விஸ்வநாதன் 
செய்திகள்

‘பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி’ – நத்தம் விஸ்வநாதன்

Staff Writer

‘பாஜக-வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி’ என முன்னாள் அதிமுக அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய எடப்பாடி பழனிச்சாமி, செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அதிமுகவைப் பொறுத்தவரை திமுக-வை வீழ்த்துவது ஒன்றுதான் குறிக்கோள். திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக அதிமுக எல்லா முயற்சிகளும் எடுக்கும். தேர்தல் நேரத்தில் அமையும் சூழலை பொறுத்துதான் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்." என்று தெரிவித்தார்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடம் தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக, “அதிமுக – பாஜக கூட்டணி அமையும் என அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்களே உங்கள் கருத்து என்ன?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த நத்தம் விஸ்வநாதன், “தலைமைதான் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும். கூட்டணி வந்தால் மகிழ்ச்சிதான். என்றாரிடம், "கடந்த காலங்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் பற்றி அண்ணாமலை மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளாரே…" என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அவர் "கடந்த கால அரசியலை பேசிக் கொண்டிருந்தால் எந்தக் கட்சியும், எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்க முடியாது." என்று தெரிவித்தார்.