”தந்தை பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக்கூடியவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கப்போவதில்லை” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வடசென்னை வளர்ச்சிப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை நகரின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்துள்ளோம். வடசென்னையின் வளர்ச்சிக்காக ரூ.1000 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகின்றன. ஓராண்டு காலத்தில் அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தந்தை பெரியாரை மரியாதைக் குறைவாகப் பேசக்கூடியவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கப்போவதில்லை. பெரியார்தான் எங்களின் தலைவர். எங்களின் தலைவர்களுக்கு எல்லாம் தலைவர்.
ஆளுநர் எல்லா விவகாரங்களிலும் அரசுக்கு எதிராக செயல்படுகிறார். அது எங்களுக்கு நல்லதுதான். அவர் தொடர்ந்து இதை செய்ய வேண்டும். மக்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் வேகம் வருகிறது. ஆளுநரின் போக்கு இந்த ஆட்சிக்குச் சிறப்பைத்தான் செய்கிறது.” என்றார்.