மும்பையில் இருந்து கொண்டு மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறையுங்கள் என்றும் தமிழ்நாடு, கேரளா போல் இந்தி வேண்டாம் என துணிந்து சொல்லுங்கள் என நவரிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கை மூலம் இந்தி மொழியை திணிக்க பாஜக முயற்சித்து வரும் நிலையில், அதற்கு தமிழ்நாடு, கேராளா போன்ற மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடந்த மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் பேரணியில் பேசிய ராஜ் தாக்கரே, "எங்கள் மும்பைக்கே வந்து அவர்கள் மராத்தி பேச முடியாது என்று எங்களிடமே கூறுகிறார்கள். இப்படிச் சொன்னால் அவர்கள் கன்னத்தில் அறை வாங்குவார்கள். இது நாட்டிற்காக. நாட்டின் வளர்ச்சிக்காக என்றெல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் தாய் மொழி இருக்கிறது. அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும்.
நாளை முதல், ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் போய் பாருங்கள். அங்கே மராத்தி பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் அனைவரும் மராத்திக்காக உறுதியாக நிற்க வேண்டும். தமிழ்நாடு, கேரளாவைப் பாருங்கள். அவர்கள் மொழி விவகாரத்தில் உறுதியாக இருக்கிறார்கள். இந்தி வேண்டாம் என்று சொல்லும் தைரியம் அவர்களுக்கு இருக்கிறது.
வாட்ஸ்அப்பில் வரலாற்றைப் படிப்பதையும், சாதிய கண்ணோட்டத்தில் மக்களைப் பார்ப்பதையும் நிறுத்துமாறு மகாராஷ்டிர இளைஞர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். சிலர் தங்களின் அரசியல் லாபத்திற்காக உங்களைப் பிரிக்கிறார்கள். மராத்தியர்கள் ஒன்றாகச் சேர்வதைத் தடுக்கவே இப்படிச் செய்கிறார்கள். சாதிய விவகாரங்களில் இளைஞர்களின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, அதானிக்கு நிலங்களை வழங்குவது போன்ற பணிகள் சத்தமே இல்லாமல் நடக்கிறது" என்றார்.