ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பெகல்காம் சுற்றுலாத்தலத்தில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கோழைத்தாக்குதல் நடத்தினர். அதில் பலியானவர்களின் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டுப் பயணிகள் சில நிமிட இடைவேளையில் இந்தப் பயங்கரத் தாக்குதலிலிருந்து உயிர்தப்பினர்.
இந்த நிலையில், இந்தக் கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தேடுவதில் இராணுவத்தினர், துணைஇராணுவத்தினர், காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை நேரில் பார்த்த சுற்றுலாப் பயணிகள், அக்கம்பக்கத்தில் கடைகளில் இருந்தவர்களிடம் விசாரித்து, அவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளி நபர்களின் படங்களை தேசியப் புலனாய்வு முகமை என்.ஐ.ஏ. உருவாக்கியுள்ளது.
தாக்குதலில் ஆறு பேருக்கும் மேல் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறும் தேசியப் புலனாய்வு முகமை, அவர்களில் மூவரின் படங்கள் மட்டுமே தற்போதைக்கு உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பொதுமக்களின் பார்வைக்காகவும் இது வெளியிடப்பட்டுள்ளது; கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்குத் தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது.