அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 
செய்திகள்

இந்தியா – பாகி. போர் நிறுத்தம்: நாடு நாடாக சென்று பெருமை பேசும் டிரம்ப்!

Staff Writer

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் என் தலையீட்டால்தான் நிறுத்தப்பட்டது என சவுதி முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருப்பது மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

பெகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் உருவானது. இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளும் 4 நாட்களாக இடைவிடாமல் தாக்குதல்கள் நடத்தின.

இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தலையீட்டால் இருநாடுகளும் தாக்குதல்களை நிறுத்திவிட்டன. இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தை டொனால்ட் டிரம்ப்தான் முதலில் அறிவித்தார். இதனையடுத்தே இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் அதிகாரப்பூர்வமாக தாக்குதல்கல் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீட்டை எப்போதும் அனுமதிப்பது இல்லை. ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீட்டை மத்திய அரசு ஏன் அனுமதித்தது? என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இதனால் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடியும் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.

இந்த பின்னணியில் சவுதி அரேபியா சென்ற டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போரை தாமே நிறுத்தியதாக மீண்டும் பெருமிதத்துடன் பேசி இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்களை முன்வைத்தே இந்த போர் நிறுத்தத்தை தாம் செயல்படுத்தியதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா- பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம் பற்றி பேசப்படவில்லை என இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் அளித்த பிறகும் டிரம்ப் இப்படி பேசி வருவது பாஜக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.