உச்சநீதிமன்றம் 
இந்தியா

மூன்றில் ஒருவர் போலி வழக்கறிஞர்! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Staff Writer

நம் நாட்டில் ஒவ்வொரு மூன்று வழக்கறிஞர்களில் ஒருவர் போலியாக இருப்பதாக இந்திய வழக்கறிஞர் சங்கம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. இந்த மனுக் குறித்துப் பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆதார் திட்டத்தைப் போன்று வழக்கறிஞர்களுக்கென ஒரு தேசிய டிஜிட்டல் பதிவேட்டை உருவாக்க வேண்டும் என்று இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அந்த மனுவில் கூறியுள்ளது.

நீதிமன்றங்களில் பயிற்சி செய்யும் வழக்கறிஞர்களில் சுமார் 35-40% பேருக்கு முறையான பட்டங்கள் இல்லாமல் இருக்கலாம் என்று இந்திய பார் கவுன்சில் தலைவர் அண்மைய அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தற்போது வழக்கறிஞர்களின் பட்டங்களைச் சரிபார்ப்பதற்காக அவ்வப்போது நடத்தும் சரிபார்ப்புகள் போலி வழக்கறிஞர்கள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு தற்காலிக நடவடிக்கைதான் என்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்விடம் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், சட்ட வல்லுநர்களுக்கான ஒரு தேசிய டிஜிட்டல் பதிவேட்டை தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைத்தனர்.

இதுக்குறித்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியதாவது:

"சட்டப்படிப்பிற்கான பட்டங்கள் வழங்கும் அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் வழக்கில் சேர்த்து, நீதிமன்றங்களில் பயிற்சி செய்வதற்குத் தேவையான தகுதிகளை உண்மையாகவே பெற்றவர்களின் பட்டியலை வெளியிடுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இந்தப் பொதுநல மனு தொடர்பாக மத்திய அரசு, இந்திய பார் கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு, மாநில வழக்கறிஞர் மன்றங்களிடமிருந்து பதில்களை நீதிபதி அமர்வு கோருகிறது.

முறையான பட்டங்கள் இல்லாமல் வழக்கறிஞர்களைப்போல வேடமிடுபவர்களை இந்த அமைப்பு அடையாளம் காண வேண்டும். முறையாகப் பயின்ற இளம் வழக்கறிஞர்களுக்கு சரியான வகையில் பயிற்சியும், ஊக்கமும் அளிக்க வேண்டும்.

இளம் வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்காலத் தலைமுறையினர் மீதே எங்கள் நம்பிக்கை உள்ளது" என்று தலைமை நீதிபதி கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram