இந்தியா

11 குழந்தைகள் உயிரை பறித்த இருமல் மருந்து: பரிந்துரைத்த மருத்துவர் கைது!

Staff Writer

மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த குழந்தைகள் 11 பேருக்கு இருமல் மருந்தை பரிந்துரைத்த மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டுள்ளார்.

ம.பி.யின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களாக, 1 - 6 வயதுக்கு உட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் இறந்தன. அதேபோல், ராஜஸ்தானின் சிகாரிலும் இரண்டு குழந்தைகள் சிறுநீரகங்கள் செயலிழந்து உயிரிழந்தன.

இந்தக் குழந்தைகள், 'கோல்ட்ரிப்' மற்றும் 'நெக்ஸ்ட்ரோ' ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டது தெரியவந்தது. இதனால், அம்மாநிலத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்தின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த நிலையில், இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல மருத்துவரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதால், அவர் மீது இன்று அதிகாலை 2:30 மணிக்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிப்

கோல்ட்ரிப் மருந்து தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், அந்த மருந்தில் ஆபத்தான டைஎத்திலின் கிளைக்கால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு அரசுக்கு மத்திய பிரதேச அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அந்த நிறுவனம் தயாரிக்கும் இருமல் மருந்தை குழந்தைகள் மட்டுமின்றி எந்த வயதினரும் பயன்படுத்த வேண்டாம் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார்.