சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் 
இந்தியா

சுட்டுக் கொல்லப்பட்ட 3 தமிழர்கள்... சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்ட வழக்கு!

Staff Writer

கர்நாடகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 3 தமிழர்கள் தொடர்பான வழக்கு சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் மான் வேட்டைக்குச் சென்றதாக அந்தோணிசாமி(50), ஜான் ரோஸ் பீட்டர்(43), செபஸ்டின் டேவிட் குமார்(35) ஆகிய மூன்று தமிழர்களை கர்நாடக போலீசார் சுட்டுக்கொன்றனர்.

இதைதொடர்ந்து கர்நாடக போலீசாரின் இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தமிழக சட்டப்பேரவையிலும், இந்த சம்பவம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. அப்போது, சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரும் மான் வேட்டையில் ஈடுபட்டதாகக் கூறிய போலீசார், சில ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், இவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

அதில் என்கவுண்டர் செய்யப்பட்ட செபஸ்டின் டேவிட் குமாரின் உடலில் இருந்த துப்பாக்கி குண்டுகள், மிக அருகில் இருந்து சுடப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரின் உடலில் நெஞ்சு, தொடை, வயிற்றுப்பகுதிகளில் துப்பாக்கிகுண்டு துளைத்ததற்கான காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் ஆகிய இருவரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டு துளைத்திருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், 3 பேரின் உடல்களிலும், 8.5 சென்டிமீட்டர் அகலத்தில், 6 சென்டிமீட்டர் ஆழத்துக்கு காயங்கள் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து, இது போலி என்கவுண்டர் என்று பலியான குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளதுடன், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்க, காவல்துறையின் சி.ஐ.டி. பிரிவிடம் கர்நாடக அரசு ஒப்படைத்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram