இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 43% பேர் தாங்கள் பாதிப்படைந்துள்ளோம் என்பதே தெரியாமல் இருப்பதாக சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், இதன் பாதிப்பினை ஆரம்பத்திலேயே கண்டறிவது தொடர்பாக இந்தியா, பிரேசில், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா உட்பட்ட பல்வேறு நாடுகளில் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு ஆய்வு நடத்தியது.
இந்நிலையில், இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்ட ஏராளமானவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 8 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 கோடிக்கும் மேற்பட்டோர் அதாவது 43% பேருக்கு தங்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருப்பதையே உணராமல் இருப்பதாக சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நீரிழிவு நோய் குறித்து இந்தியர்களிடம் தவறான புரிதலும், பரிசோதனை செய்துகொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் 75% பேர் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக அளவு இருப்பதற்கான அறிகுறிகளை உடலே வெளிப்படுத்தும் என்று நம்புவதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், நீரிழிவு நோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கலாம் என்று சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 80% பேரைக் கண்டறியவேண்டும் என்ற இலக்கை நிர்ணயத்துள்ளதாக சர்வதேச நீரிழிவுக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.