நாடு முழுவதும் நடப்புக் கல்வியாண்டில் 58 பொறியியல் - தொழில்நுட்பக் கல்லூரிகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தால் படிப்படியாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதில் 3 அரசு உதவிபெறும் கல்லூரிகள்; 55 தனியார் கல்லூரிகள்.
இந்த நடவடிக்கைக்கு, குறைந்த மாணவர் சேர்க்கை, போதிய தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாமை, கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, உரிய தரநிலைகளை பூர்த்திசெய்யத் தவறியது உட்பட்டவை காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தக் கல்லூரிகளில் இனி முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது. ஆனால், ஏற்கனவே பயிலும் மாணவர்கள் தங்களது படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்து முடிக்க எந்தத் தடையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரத்தில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் 8, தெலங்கானா, பஞ்சாப்பில் தலா 4, தமிழ்நாட்டில் 2 கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கை தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் தெரிவித்துள்ளது.