இடிந்துவிழுந்த மாணவர் விடுதி 
இந்தியா

இடிந்து விழுந்த மாணவர்கள் விடுதி... 6 பேர் பலி!

Staff Writer

மாணவர்கள் விடுதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டபோது, அந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லிப் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த ஐந்து மாடி விடுதிக் கட்டடத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தக் கட்டடத்தின் தரைத்தளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, கட்டடம் இடிந்து விழுந்தது.

இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களின் விவரம் இன்னும் அறியப்படவில்லை.

இந்தக் கட்டடம் 40 முதல் 50 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்றும், தரைத்தளத்தில் விருந்தினர் தங்குமிடத்திற்கான சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டபோது, இந்த விபத்து அரங்கேறியதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தக் கட்டடத்தின் உரிமையாளர் ஹரிராம் பன்சல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் பெரும்பாலும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, ஆத்ம ராம் சனாதனக் கல்லூரி, மோத்திலால் நேரு கல்லூரி ஆகிய 3 கல்லூரிகளில் படித்துவருபவர்கள்.

இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும், உத்தரப்பிரதேசம், அரியானா, ஜம்மு, கேரளம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்த விடுதிக் கட்டடத்தின் சுவர்கள் பிளந்தும், தரைகளில் தண்ணீர் தேங்கியும், பராமரிப்பின்றி மோசமாக இருந்ததாக அங்கு தங்கியிருந்த மாணவர்கள் தெரிவித்தனர். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram