புலி 
இந்தியா

75 புலிகளில் 25 புலிகள் ஒரே ஆண்டில் மிஸ்ஸிங்!

Staff Writer

ரந்தம்பூர் தேசிய பூங்காவில் உள்ள புலிகள் காப்பகத்தில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 புலிகள் காணாமல் போனதாக ராஜஸ்தான் மாநில தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்துள்ளார்.

அதிக அளவிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டில், ரந்தம்பூர் பூங்காவில் இருந்த 13 புலிகள் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அது ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை மூன்று ஆண்டுகளில் நடந்ததாகும்.

ராஜஸ்தான் மாநிலம் ரந்தம்பூர் தேசிய பூங்காவில் இருந்த 75 புலிகளில் மூன்றில் ஒரு பங்கான 25 புலிகள் காணாமல் போயுள்ளதாக தலைமை வனவிலங்கு காப்பாளர் நேற்று அறிவித்துள்ளார். இது வனவிலங்கு ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போன புலிகள் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் நேற்று நியமித்துள்ளார். விசாரணையில் புலிகள் காணாமல் போனதற்கு பூங்கா நிர்வாகத்தின் அலட்சியம் கண்டறியப்பட்டால், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே 17 முதல் செப்டம்பர் 30 வரை காணாமல் போன 14 புலிகளை கண்டறிவதே பூங்கா நிர்வாகத்தின் முதன்மைப் பணியாக உள்ளது.

ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் கண்காணிப்பில் இருந்து புலிகள் காணாமல் போன விவகாரத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட ஆணையில் தெரிவித்திருப்பதாவது:

‘ரந்தம்பூர் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநருக்கு பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும் திருப்திகரமான பதில்கள் எதுவும் கிடைக்கவில்லை. கடந்த அக்டோபர் 14ஆம் தேதியிட்ட அறிக்கையின்படி, ஒராண்டுக்கு மேலாக 11 புலிகள் குறித்து எவ்வித தகவலும் இல்லை. மேலும், 14 புலிகள் பற்றிய உறுதியான தகவல்கள் ஓராண்டாக இல்லை. இதனால், புலிகள் காணாமல் போன விவகாரத்தை விசாரிக்க குழு அமைக்கப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எங்கய்யா போச்சு புலியெல்லாம்?