தில்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராடியதாக கரப்பான் கட்சியினர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
தில்லி ஜந்தர் மந்தரில் இனி போராட்டம் நடத்தக்கூடாது என்று தில்லி காவல்துறை அறிவித்தபோதிலும், கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் நேற்று தேசியக் கொடியுடன் ஜந்தர் மந்தரில் போராடினர்.
காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அத்துமீறல் நடவடிக்கைக்காக இவர்களை 5 நாள்கள் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே, மூவர்ண தேசியக் கொடியை விரித்து அவர்கள் போராடியது அவர்களது குற்றமா என்றும், எதிர்ப்புகளை நிஜமாகவே நீங்கள் அடக்க நினைத்தால், இதுபோன்ற கோழைத்தனமான செயல்களின் பின்னால் ஒளியாமல், அவசர நிலையைக் கொண்டுவர பிரதமருக்கு தைரியம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சமூக ஊடகப்பக்கத்தில் கூறியதாவது:
" இந்த அரசாங்கத்தால் எத்தனை போராட்டக்காரர்களைக் கைது செய்ய முடியும்? பா.ஜ.க.வால் எத்தனை இளைஞர்களின் குரல்களை ஒடுக்க முடியும்?
அவர்கள் எவ்வளவு அதிகமான இளைஞர்களைச் சிறையில் அடைக்கிறார்களோ, அவ்வளவு அதிகமான அரசியல் சார்பற்ற சாதாரண குடிமக்கள் வீதிகளில் இறங்கி, மக்களின் உண்மையான சக்தியை அவர்களுக்குக் காட்டுவார்கள்!
செளரவ் தாஸ், அஷூடோஸ் ரன்கா ஆகியோருக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இருக்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து சட்டப் பிரதிநிதித்துவத்தையும் ஆதரவையும் வழங்க தி.மு.க. தயாராக உள்ளது." என்று கூறியுள்ளார்.