சி.ஜே.பி.க்கு இலவசமாக பா.ஜ.க. விளம்பரம் செய்து வருவதாக வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும், மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.விடம் பல்வேறு கேள்விகளை இவர் முன்வைத்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கருத்து பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து, தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:
"கடந்த 2011-ஆம் ஆண்டு, அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி, தனது கைகள் கட்டப்படாமல் இருந்திருந்தால், டெல்லிக்குச் சென்று மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்திருப்பேன் எனக் கூறினார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான அமைதியான போராட்டத்தை காவல்துறை ஒடுக்கியதற்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்திருந்தார்.
டெல்லியில் சி.ஜே.பி. அமைப்பின் போராட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து அழைத்துச் சென்ற விதம் குறித்து நான் சில கேள்விகளை எழுப்பினேன். எதிர்பார்த்தபடியே, நேற்றிலிருந்து எனக்கு தாக்குதல்கள் தொடங்கியுள்ளன. நான் கடந்த ஜூன் 5ஆம் தேதி பா.ஜ.க.விலிருந்து விலகிவிட்டேன். அதேப்போல,சி.ஜே.பி. அமைப்பின் போராட்ட உத்திகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை.
ஆனால், அவர்கள் முக்கியமானதாகக் கருதும் ஒரு பிரச்சினையில் எதிர்ப்புத் தெரிவிக்கவோ, வாதிடவோ, போராடவோ அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
மத்திய அரசு திசைதிருப்பும் அரசியல் வாதங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, இந்தக் கேள்விகளுக்குப் நியாயமாக பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
1. போராட்டம் நடத்த அனுமதி கோரி சி.ஜே.பி. அமைப்பு கடிதம் அளித்த பிறகு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நடைமுறையில் இருந்த உத்தரவின்படி, ஜந்தர் மந்தர் எவ்வாறு போராட்டத் தளமாக இருப்பதிலிருந்து நீக்கப்பட்டது?
2. டெல்லி காவல்துறையே புகாரளிப்பவராக இருக்கும் சி.ஜே.பி. வழக்கில், அதே டெல்லி காவல்துறையைச் சேர்ந்த உதவி ஆணையர் ஒருவர், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தடுப்புக் காவலில் வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றவராக இருக்கிறார் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது?
3. அக்டோபர் 13-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் இருந்து கைது செய்யப்பட்டவர்களின் பிணை விசாரணையின்போது, அக்டோபர் 19-ஆம் தேதி, டெல்லி காவல்துறையின் உதவி ஆணையர் எனப்படும் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் வேண்டுமென்றே தாமதமாக வந்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்த விசாரணையிலிருந்து விலகிக்கொண்டார்? இது என்ன மாதிரியான விளையாட்டு?
4. எட்டு பிணை உத்தரவாதங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன? பிணை உத்தரவாதம் அளிக்க வந்த நபரிடம் சிறப்பு நிர்வாக நீதிபதி ஏன் குறுக்கு விசாரணை நடத்தினார்?
5. நீட் தேர்வு தொடர்பான போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் பயன்படுத்திய பெல்லட் துப்பாக்கிகள் குறித்தோ, போராட்டக்காரர்களுக்கு எதிராக நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை மீறிய டெல்லி காவல்துறையினரின் பிற நடவடிக்கைகள் குறித்தோ ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?
கடந்த காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக் காலங்களில், டெல்லியில் பா.ஜ.க. தொண்டர்கள் யாரும் பிணை நிபந்தனைகளை மீறியதில்லையா? அப்போது தடுப்புகளைத் தாண்டிச் சென்றதும், காவல்துறையின் உத்தரவுகளை மீறியதும் இதே டெல்லி காவல்துறையின் கண்காணிப்பில்தானே நடந்தன? அப்போது அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது? இப்போது நடப்பதைப் போலவா?
சமீபத்தில் தசரா கொண்டாட்டங்களின்போது கரப்பான் பூச்சியின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதையும் பார்த்தேன். இதன் மூலம் அவர்களுக்கு தேசிய அளவில் இலவச விளம்பரம் பெற்றுத் தருவது யார் என்று விசாரித்த போது, ஆச்சர்யத்துக்கு இடமில்லாமல் இதற்குத் தலைமை தாங்கியது பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் அசோக் கோயல் என்பது தெரிய வந்தது.
பா.ஜ.க. உண்மையில் சி.ஜே.பி. அமைப்பை எதிர்க்கிறதா? அல்லது அதற்கு இலவச விளம்பரம் செய்து கொண்டிருக்கிறதா? சி.ஜே.பி.யை ஒரு பெரிய அரசியல் சக்தியாகக் காட்டுவதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வாக்குகளைப் பிரிக்க பா.ஜ.க. விரும்புகிறதா?
மத்திய அரசுக்கு எதிராக நடைபெறும் ஒவ்வொரு போராட்டத்தையும், வெளியிடப்படும் ஒவ்வொரு அறிக்கையையும், வெளிநாட்டு சக்திகளால் நிதியளிக்கப்படுவதாகவும் தேசவிரோதச் செயலாகவும் சித்தரிப்பதைப் பார்க்கிற போது, உண்மையிலேயே சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது.
டெல்லியில் மத்திய அரசு 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்தும், தன்னைத் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்வதற்காக எப்போதும் ஒரு எதிரியை உருவாக்கிக்கொண்டே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு வலுவாக ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது உண்மையிலேயே வருத்தத்திற்குரிய விஷயம்!" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.