உச்ச நீதிமன்றம் 
இந்தியா

ஆசிரியர் பணியில் தொடர, பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கட்டாயம்: உச்ச நீதிமன்றம்

Staff Writer

ஆசிரியராகப் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது.

நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் அதை கட்டாயப்படுத்தக் கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது. குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பொறுத்த வரைக்கும் அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது

அதேபோல ஓய்வு பெறக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வு கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்த வரைக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று ஆக்கப்படுவதனால் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனைதொடர்ந்து நீதிபதி திபான்கர் தாத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது

அந்த தீர்ப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்தது. இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும் அதேவேளையில், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள பணியாற்றும் ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஒய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுகொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். அதேவேளையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற அம்சங்களை குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.