சுரங்கத்தில் மீட்புப்பணி 
இந்தியா

41 தொழிலாளர்களை மீட்டவுடன் முதல்வர் தாமி இங்கேதான் சென்றார்!

Staff Writer

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டவுடன் அம்மாநில முதல்வர் புஷ்கர் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் இருவர் முதலில் சென்ற இடம் அருகே இருந்த பாபா பாக்நாக் கோவில்தான். இந்த கோவில் இடிந்துவிழுந்த சில்கியாரா சுரங்கப்பாதையில் வாயிலுக்கு அருகே அமைந்துள்ளது. கடந்த தீபாவளிக்கு முன்னதாக இந்த கோவில் இடிக்கப்பட்டிருந்தது. சாலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்காகவே இந்த கோவிலை இடித்ததாக கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த அமைப்பு கூறியது.

இந்த கோவில் இடிக்கப்பட்ட சில நாட்களிலேயே சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதையடுத்து உள்ளூர் மக்கள் பாபாவின் கோவிலை இடித்ததால் அவர் கோபம் கொண்டுவிட்டதால் இந்த துர்சம்பவம் நடந்தது எனச் சொல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து பாபாவின் கோவிலை சின்னதாக சுரங்கப்பாதை ஓரம் அமைத்து வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அங்கே மீட்புப்பணி வெற்றிகரமாக நடக்க வேண்டி பூஜைகளும் நடத்தப்பட்டன.

இந்நிலையில்தான் முதலமைச்சரும் மத்திய அமைச்சரும் சென்று அக்கோவிலில் வழிபட்டதுடன், விரைவில் பாபா பாக்நாத் கோவில் நல்லமுறையில் கட்டித்தரப்படும் என்றும் உறுதி அளித்தனர்.