வங்கி வேலைநிறுத்தம் 
இந்தியா

வங்கிச் சேவைகள் கடும் பாதிப்பு!

Staff Writer

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துவருவதால் இன்று முற்றிலும் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

எல்லா வாரங்களிலும் ஐந்து நாள்கள் வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முக்கியமாக இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. வங்கி சங்கங்களின் ஒன்றுபட்ட அமைப்பு அறிவித்துள்ள இந்த போராட்டத்தில் நாடு முழுவதுமிருந்து ஏராளமான ஊழியர்களும், அதிகாரிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

கடந்த 23ஆம் தேதியன்று தலைமை தொழிலாளர் ஆணையருடன் கூட்டமைப்பு நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து ஏற்கெனவே அறிவித்தபடி வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது.

பணம் செலுத்துதல், எடுத்தல், காசோலையை மாற்றிக்கொள்ளுதல், பிற வங்கி நிர்வாகச் சேவைகள் அனைத்தும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் ஆகிய வங்கிகளில் தனியார் வங்கிச் சேவை என்பதால் இந்த வேலைநிறுத்தத்தால் எந்த பாதிப்பும் இல்லை.

தற்போதைய நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளில் முதலாம், மூன்றாம், ஐந்தாம் சனிக்கிழமைகளில் வேலை நாள் என்பது குறிப்பிடத்தக்கது.