பிஸ்லரி குடிநீர் பாதுகாப்பானது என்று பிஸ்லரி நிறுவனம் அறிவிப்பு 
இந்தியா

பிஸ்லரி தண்ணீர் ஆபத்தானதா?- திடீர்ப் பஞ்சாயத்து!

Staff Writer

பிஸ்லரி நிறுவனக் குடிநீர் குடிப்பதற்கு பாதுகாப்பற்றது என்ற இந்திய உணவுப் பாதுகாப்பு – தரப்படுத்துதல் ஆணையத்தின் குற்றச்சாட்டிற்கு பிஸ்லரி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிஸ்லரி குடிநீர் மாதிரியை எடுத்து இந்திய உணவுப் பாதுகாப்பு – தரப்படுத்துதல் ஆணையம் நடத்திய சோதனையில், புரோமேட், பாலிநியூக்ளியர் அரோமேட்டிக் ஹைட்ரோகார்பன் ஆகியவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இந்த இரண்டு இரசாயனப் பொருட்களும் மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பிருப்பதாகவும், பிஸ்லரி நிறுவனத்திலிருந்து எடுக்கப்பட்ட அந்த மாதிரி குடிப்பதற்குப் பாதுகாப்பற்றது என்று இந்திய உணவு பாதுகாப்பு – தரப்படுத்துதல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக பிஸ்லரி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கடந்த 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் கோவாவில் உள்ள பிஸ்லரி ஆலையில் தயாரிக்கப்பட்ட ஒரு பேட்ச் தண்ணீரில் மட்டுமே இந்திய உணவு பாதுகாப்பு – தர நிர்ணய ஆணையத்தால் சோதனை நடத்தப்பட்டது. கோவா ஆலையிலிருந்து அதிகாரிகள் எடுத்துச் சென்ற 6 மாதிரிகளில் 5 மாதிரிகள், இந்திய தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்கப்பட்ட அளவைப் பூர்த்தி செய்தன. ஒரே ஒரு மாதிரியில் மட்டுமே புரோமேட் அளவு அதிகமாக இருந்தது.

அதிலும், அந்த மாதிரியை மறுபரிசோதனை செய்தபோது, புரோமேட் அளவு அதில் அனுமதிக்கப்பட்ட அளவிலேயே இருந்தது. இது தொடர்பான அறிக்கை, கடந்த பிப்ரவரி மாதமே இந்திய உணவு பாதுகாப்பு – தர நிர்ணய ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, ஆணையத்திடமிருந்து எந்தவொரு தகவலும் வராததால், இந்த விவகாரம் முடிந்துவிட்டதாகக் கருதினோம்.

பிஸ்லரி குடிநீரானது, 10 நிலை சுத்திகரிப்பு முறைகளை கொண்டுள்ளது. அதில், 90-க்கும் மேற்பட்ட தரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டே விற்பனைக்கு வருகின்றன. எனவே, பிஸ்லரி குடிநீர் பாதுகாப்பானதுதான்." என்று பிஸ்லரி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram