துரோணாச்சாரியார் ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியது போல் மத்திய அரசு இளைஞர்களின், விவசாயிகளின், சிறுபான்மையினரின் கட்டை விரலை வெட்டுவதாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றத்தில் நடந்து வரும் குளிர் காலக் கூட்டத்தொடரில் 75 ஆண்டுக்கால இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பயணம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி மக்களவையில் இரண்டாவது நாளாக நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, ”நான் எனது பேச்சை பாஜக மட்டுமல்லாது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிகப்பெரிய தலைவரின் பேச்சில் இருந்து தொடங்க விரும்புகிறேன். "இந்தியர்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் என்று எதுவும் இல்லை. வேதங்களுக்கு பிறகு இந்திய நாட்டில் மிகவும் வணங்கக்கூடியதாக இருக்கும் மனுஸ்மிருதி நமது பண்டைய காலத்தில் இருந்து நமது பராம்பரியம், நம்பிக்கைகளுக்கு அடிப்படையாக இருக்கிறது. இது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நமது தேசத்தை போற்றுகிறது. இன்று அது தான் நமது நாட்டின் சட்டம்" என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். அவர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனிஸ்மிருதி முந்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆனால், இன்று நீங்கள் (பாஜக) இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி பேசுவதைப் பார்க்க நன்றாக இருக்கிறது. நீங்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி பேசுவது மூலம் உங்கள் தலைவர் சாவர்க்கரின் பேச்சை மீறுகிறீர்கள்.
1000 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு அடர்ந்த காட்டில் ஏகலைவரின் கட்டை விரலை துரோணாச்சாரியார் எப்படி வெட்டினாரோ, அப்படி இந்த அரசு இளைஞர்களின் கட்டை விரலை வெட்டுகிறது.
துரோணாச்சாரியார் எப்படி ஏகலைவரின் விரலை வெட்டினாரோ, அப்படி இப்போது தேசத்தின் கட்டை விரலை வெட்டுவதில் கவனமாக இருக்கிறது அரசு.
தாராவியை அதானியிடன் கொடுத்தப்போது, தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு, நடுத்தர பிசினஸ்களின் கட்டை விரலை வெட்டியது. இந்திய துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றை அதானியிடம் கொடுத்தப்போது இந்தியாவில் உள்ள நேர்மையான பிசினஸ்களின் கட்டைவிரலை வெட்டியது.
சமூதாய மற்றும் பொருளாதார சமத்துவம் இல்லாமல் அரசியல் சமத்துவம் இருந்தால், அது அரசியல் சமத்துவத்தையே அழித்துவிடும் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். அது இப்போது அனைவருக்கும் முன்பாக இருக்கிறது. தற்போது அனைத்து அரசு நிறுவனங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சமூக சமத்துவமும் இல்லை, பொருளாதார சமத்துவமும் இல்லை.
அதனால் தான், அடுத்தது நாங்கள் 'சாதி கணக்கெடுப்பு' நோக்கி நகர்கிறோம். அதன் மூலம், இந்த தேசத்திற்கு நீங்கள் யாருடைய கட்டை விரலை வெட்டி உள்ளீர்கள் என்பதைக் காட்டுவோம்.
நமது அரசியலமைப்பு சட்டம் மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றை அறவே மறுக்கிறது. சில நாள்களுக்கு முன்பு, சம்பாலில் இருந்து சில இளைஞர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். ஐந்து அப்பாவி மக்கள் சுடப்பட்டதாக கூறினார்கள்.
நீங்கள் எங்கு சென்றாலும் ஒரு மதத்திற்கு எதிராக இன்னொரு மதத்தை நிறுத்துகிறீர்கள். நீங்கள் வெறுப்பை பரப்புகிறீர்கள். இது அரசியலமைப்பு சட்டத்தில் எங்கு எழுதியிருக்கிறது.
நாங்கள் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றுகிறோம். ஆனால், பாஜகவின் புத்தகம் மனுஸ்மிருதி ஆகும்" என்று காட்டமாக பேசினார்.