மத்திய அரசு நிர்ணயித்த அளவைவிட பெட்ரோலில், அதிக எத்தனால் கலந்திருப்பதாக கர்நாடக நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ரிஷ்வான் அர்ஷத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு 20% எத்தனால் மட்டுமே பெட்ரோலில் கலப்படம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்த நிலையில், சில பெட்ரோல் விநியோகிக்கும் நிறுவனங்கள் 30%-த்திற்கும் மேல் எத்தனாலை கலப்படம் செய்து விற்பனை செய்துவருவதாக கர்நாடக அமைச்சரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமைச்சர் ரிஷ்வான் அர்ஷத் தெரிவித்த சோதனை விவரம்:
முதலில், பெங்களூரு நகர்ப்புறம், பெங்களூரு ஊரகம், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, இராமநகரா, தட்சிண கன்னடா ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் இருந்து 63 மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
பின்னர், அவை தேசிய தரச்சான்றிதழ் பெற்ற ஆய்வகங்களில் சோதனை செய்யப்பட்டன. சோதனையின் முடிவில், 80% எரிபொருள் நிலையங்களில், 20% அதிகமான எத்தனால் கலப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆய்வக முடிவுகள்:
1) இந்தியன் ஆயில்: அதிகபட்சமாக 31.2% எத்தனால் கலப்பு
2) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்: 30.5%, 27% எத்தனால் கலப்பு
3) பாரத் பெட்ரோலியம்: 26.5% வரை எத்தனால் கலப்பு
4) நயாரா : 26.1% எத்தனால் கலப்பு
5) செல் பெட்ரோலியம்: 25.5% எத்தனால் கலப்பு
அதிகப்படியான எத்தனால் கலப்பால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதமாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளவை:
1) பெட்ரோலில் எத்தனாலின் அளவு அதிகரிக்கும் போது வாகனங்களின் மைலேஜ் கணிசமாகக் குறைகிறது.
2) இந்தியாவில் உள்ள 99% வாகனங்கள் இ20 அளவிற்கே சான்றளிக்கப்பட்டவை. இந்நிலையில், 30%-க்கும் அதிகமாக எத்தனால் கலக்கும்போது இன்ஜின் பாகங்கள், ரப்பர் சீல்கள், பம்புகள் சேதமடைவதால், பராமரிப்புச் செலவு அதிகரிக்கும்.
மத்திய அரசுக்கு கர்நாடக அரசின் கோரிக்கைகள்:
1) நுகர்வோருக்கு விநியோகித்த எத்தனாலில் இருந்த அளவு குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து - நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், பெட்ரோலியம் - இயற்கை எரிவாயு அமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
2) பெட்ரோலில் 20% மேல் கலந்து விற்கும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும்.
3) பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க 'இ20 ஸ்பாய்லேஜ் ஃபண்ட்' என்ற இழப்பீட்டு நிதியத்தை உருவாக்க வேண்டும்.
4) ஒவ்வோர் எரிவாயு நிலையத்திலும், எவ்வளவு சதவீத எத்தனால் கலக்கப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும்.