நாடு முழுவதும் நடத்தப்பட்ட நீட் தேர்வு இன்று இரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்கள், பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மறுதேர்வு நடத்தப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தேசிய தேர்வு முகமை கூறியிருக்கிறது.
முதலில் இராஜஸ்தானில் கசிந்ததாகக் கூறப்படும் கேள்விகளிலிருந்தே இந்த விவகாரம் தொடங்கியது. அங்கு பரபரப்பான 400 கேள்விகள் அடங்கிய வினாத்தாள்கள் கோட்டா உட்பட அந்த மாநிலத்தின் முக்கிய நீட் பயிற்சி மைய ஊர்களில் சுற்றுக்குப் பரவியது.
அந்தக் கேள்விகளில் வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 100+ கேள்விகள் நீட் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றதாகத் தகவல் வெளியானது. அது உறுதிசெய்யப்பட்டதும் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
அதேசமயம், இன்று காலையில் தேசிய தேர்வு முகமை மொத்தமாக தேர்வையே இரத்துசெய்தும் உத்தரவிட்டது.
முன்னதாக, இராஜஸ்தான் சிறப்பு நடவடிக்கைகள் குழு காவல்துறையினர் இந்தப் புகாரை விசாரித்தனர். அதில், தற்போது கேரளத்தில் முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ஒரு மாணவனிடமிருந்து இராஜஸ்தானில் உள்ள மாணவருக்கு அனுப்பி, அவர் மூலமாக அங்குள்ள தங்கும் விடுதி உரிமையாளர் மூலம் அதிகமான அளவில் பரவியது.
அதிகபட்சம் 5 இலட்சம் ரூபாய்வரை விற்கப்பட்ட அந்த கசிவு வினாத்தாள், கடைசியில் 30 ஆயிரம் ரூபாய்வரை நின்றுள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டில் பீகாரில் இப்படித்தான் நீட் வினாத்தாள் கசிந்து பெரும் பிரச்னை ஏற்பட்டது. அப்போது ஒரு தாள் 30-50 இலட்சம்வரை விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு 67 பேர் 720 மதிப்பெண் பெற்றிருந்தார்கள். இதனால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, 1563 மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் இரத்துசெய்யப்பட்டது.
இது ஒருபக்கம் இருக்க, நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பாடுதான் கவலைக்குரியதாக உள்ளது.
பெரும்பாலானவர்கள் ஓராண்டு, இரண்டாண்டுகள் என மீண்டும் மீண்டும் இந்தத் தேர்வை எழுதினால்தான் தேர்வில் கணிசமான மதிப்பெண்களைப் பெறமுடிகிறது.
அவர்களிலும் மிகக் குறைவானவர்களே மருத்துவப் படிப்பில் சேரமுடிகிறது.
இந்தத் தேர்வே அந்த மாணவர்களைக் கடுமையாகச் சோர்வடைய வைக்கிறது.
இந்த நிலையில், மீண்டும் தேர்வு இரத்து செய்யப்பட்டிருப்பது மாணவர்களை சோர்வடைய வைத்துள்ளது.