யு.பி.ஐ. பரிவர்த்தனை 
இந்தியா

அக்டோபர் முதல் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம்!

Staff Writer

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையான யு.பி.ஐ. மூலம் செய்யும் பணப் பரிமாற்றத்திற்கு மத்திய அரசு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

யு.பி.ஐ. முறையை இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய வங்கிகள் சங்கம் இணைந்து உருவாக்கிய இந்திய தேசிய பணப்பரிமாற்றக் கழகம் நிர்வகித்து வருகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு, ரூ. 7 லட்சமாக இருந்த யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை, கடந்த நிதியாண்டில் ரூ. 314 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், வரிவிதிப்பு, இதர சட்டத்திருத்த மசோதா - 2026 நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா, யு.பி.ஐ., ரூபே அட்டை பரிவர்த்தனைகளுக்கான பூஜ்ஜிய வணிகர் தள்ளுபடி கட்டணத்தை மாற்றியமைக்க அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான புதிய கட்டமைப்பை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனைக்கான புதிய விதிகள் :

1) தனிநபர் பரிவர்த்தனைக்கு எந்தக் கட்டணமும் இல்லை.

2) யு.பி.ஐ., கியு.ஆர். குறியீடு மூலம் மாதம் ரூ. 1 இலட்சம்வரை பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சிறு வணிகர்களுக்குக் கட்டணம் இல்லை.

3) வணிகர்களுக்கு ரூ. 2000வரையிலான பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை.

4) ரூ. 2000-க்கும் மேல் உள்ள வணிகப் பரிவர்த்தனைகளுக்கு ரூ. 8 கட்டணம் வசூலிக்கப்படும்.

5) ரூ. 75,000, அதற்கு மேற்பட்ட கட்டணங்களுக்கு ரூ. 300 வசூலிக்கப்படும்.

6) இரயில்வே, தொலைத்தொடர்பு, எரிபொருள் போன்ற அத்தியாவசியமான துறைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்தக் கட்டண விதிமுறை அடுத்த மாதம் அக்டோபர் 15ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாகச் செயலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram