வாட்சாப் வெப்  
இந்தியா

வாட்சாப் வெப் உஷார்... மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

Staff Writer

கணினி அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கருவியில் வாட்சாப் வெப்பைப் பயன்படுத்திய பின்னர், வெளியேறவேண்டியது அவசியம் என்று இந்திய இணையவழி குற்றத்தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையவழிக் குற்றத் தடுப்பு மையத்தின் இணையவழிக் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாவது :

"பொதுவாக நாம் பயன்படுத்தும் கணினி அல்லது மற்றவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் கருவியில் வாட்சாப் வெப்பை பயன்படுத்திய பின்னர், அதிலிருந்து வெளியேறாவிட்டால், அனுமதியின்றி மற்றவர் அந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியும். அந்த கணக்கு வைத்திருப்பவரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி, அவரைப் போலவே மற்றவர்களுக்குத் தகவல்களை இணையவழி குற்றவாளிகள் அனுப்பமுடியும்.

இதன் மூலமாக கணக்கு வைத்திருப்பவரின் பெயரில் இணையவழி குற்றவாளிகள் மோசடியை நடத்த முடியும். கணினியில் வாட்சாப் வெப் மூலமாக அலுவலகம் சார்ந்த அல்லது பிற முக்கிய பணிகளை மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். தவிர்க்கமுடியாத சூழல்களில் இன்காக்னிடோ, பிரைவேட் பிரெளசிங் முறையைப் பயன்படுத்த வேண்டும்.

இணையப் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் கருவிகள், கணினிகள், பிரெளசா்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு மென்பொருள்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.

சந்தேகத்துக்குரிய பதிவிறக்கங்கள், முன்பின் தெரியாத கோப்புகள், சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மென்பொருள்களைத் தவிா்க்க வேண்டும்." என்று இந்திய இணையவழிக் குற்றத்தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram