மாணவர்களின் போராட்டம் 
இந்தியா

மாணவர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்குப் போகக்கூடாது : தில்லி பல்கலைக்கழகங்கள் எச்சரிக்கை!

Staff Writer

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராடிவரும் நிலையில், மாணவர்கள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்லக்கூடாது என்று பிரபல மத்திய பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்- ஜே.என்.யு. வெளியிட்டுள்ள அறிவிப்பு:

"ஜே.என்.யு. சமூகத்திற்கு தொடர்புடைய அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அவர்களின் பாதுகாப்பை முன்னிலைப் படுத்த வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, தில்லி ஜந்தர் மந்தர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களிலோ, கூட்டங்களிலோ கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஊடங்களில் பொறுப்பாக நடந்துக்கொள்ளுங்கள். அதை மீறுபவர்கள் சட்டரீதியான விளைவுகளையும், பல்கலைக்கழகத்தின் நடத்தை விதிகளின் கீழ் எடுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் ஆளாக நேரிடும்.

கல்விசார்ந்த விழுமியங்களை முன்னிறுத்தியும், பொறுப்புள்ள குடிமகனாகவும் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." என்று ஜேஎன்யு நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும், தில்லி பல்கலைகழக நிர்வாகம், "மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, கடுமையான கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஜந்தர் மந்தர் பகுதியில் சட்டவிரோதக் கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவது சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கெள்ளுங்கள்.

இதுபோன்ற சட்டநடவடிக்கைகள் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பை பாதிக்கும்.

எனவே, தங்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, சட்டத்திற்கு உட்பட்டு மாணவர்கள் அனைவரும் ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மேலும், தற்போதைய சூழலை தீவிரப்படுத்தும் நோக்கில் ஏராளமான போலித் தகவல்கள் பரவி வருவதால், மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துகிறோம்." என்று கூறப்பட்டுள்ளது.

தில்லி பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை இணைத்து தன் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, "மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் வகையிலான கருத்துகளை பதிவு செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம்? நேரம் வரும்போது இதற்கு நீங்கள் கட்டாயம் பொறுப்பேற்கும் சூழல் உருவாகும். இதைக் குறித்துவைத்துக் கொள்ளுங்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram