கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா காலையில் அறிவித்தபடிதன் பதவிவிலகல் கடிதத்தை சற்றுமுன்னர்ஆளுநர் அலுவலகத்தில் அளித்தார்.
ஆளுநர் தாவர் சந்த் கெலாட் இல்லாததால், அவரின் சிறப்புச் செயலாளர் பிரபு சங்கரிடம் கடிதத்தைக் கொடுத்தார் சித்தராமய்யா.
”கிராமப்புறத்தில் பிறந்த நான், சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, எதிர்கட்சி தலைவர், இரண்டு முறை முதல்வர் ஆவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் அரசியலமைப்புச் சட்டத்தால் உயர்ந்த இந்தக் கனவு நிறைவேறியுள்ளது.
புத்தர், பசவா, பாபா சாகேப், மகாத்மா காந்தி ஆகியோரின் கருத்துகளே எனது கொள்கைகள். ஒடுக்கப்படும், சுரண்டப்படும், ஏழை மக்களின் சார்பாக மனப்பூர்வமாக உழைத்த திருப்தி என் நாற்பத்து எட்டு ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கிடைத்துள்ளது.
என்னை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தோளோடு தோளாக பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், கட்சியின் முன்னவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுவரை என்னை நேசித்து சுமந்த அன்பு நிறைந்த கன்னட மக்களுக்கும் நன்றி.
அரசியலமைப்புதான் என் மதம், மக்கள்தான் என் கடவுள். முதல்வர் பதவியிலிருந்துதான் விலகலே தவிர, தீவிர அரசியலிலிருந்து அல்ல.
சமூக நீதிக்காகவும் அரசியலமைப்புக்கு எதிரான மதவாத சக்திகளுக்காகவும் இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன்.” என்று சித்தராமய்யா தன் சமூகஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அடுத்த முதலமைச்சர் சிவக்குமாரும் அவருடன் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தார்.