கோடியாஸ் பல்கலைக்கழகம், Unitree Go2 ரோபோவை இந்திய கண்டுபிடிப்பாகக் காட்டிய சர்ச்சையில், மாநாட்டில் இருந்து வெளியேறி மன்னிப்பு கேட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் சர்வதேச ஏஐ மாநாட்டின் இரண்டாம் நாளில் உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவைச் சேர்ந்த கோடியாஸ் பல்கலைக்கழகம், ரோபோ நாய் ஒன்றை காட்சிப்படுத்தியது.
இந்த வீடியோ அதிகம் கவனம் பெற்ற நிலையில், மாநாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது சீனாவைச் சேர்ந்த Unitree Go2 என்ற ரோபோ என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டினர்.
ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை இந்தியக் கண்டுபிடிப்பாகக் காட்டி முதலீடுகளை ஈர்க்க முயன்றதாக கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து, மாநாட்டின் கண்காட்சி அரங்கை காலி செய்து வெளியேறுமாறு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அப்பல்கலைக் கழகம், “சமீபத்திய ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்திற்கு கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தைச் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.
மாநாட்டில் எங்கள் ஸ்டாலை நிர்வகித்த, எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அந்த ரோபோவின் தொழில்நுட்ப மூலம் குறித்து தெரியாது. மேலும், கேமரா முன் தோன்றும் ஆர்வத்தில் அவர் தவறான தகவல்களை கொடுத்துவிட்டார்.
எங்கள் தரப்பில் இருந்து பத்திரிகையாளர்களிடம் பேச அவருக்கு அதிகாரமும் வழங்கப்படவில்லை. ஏற்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு நாங்கள் வளாகத்தை காலி செய்துள்ளோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.