கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில கல்வி அமைச்சர்களுக்கும் 6 கேள்விகளுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், அரசுப் பள்ளிகளின் நிலை, ஆசிரியர் பணியிடங்கள், நிதி நிலை, அடிப்படை மற்றும் டிஜிட்டல் வசதிகளை அணுகுவதற்கான வசதிகள் ஆகியவை குறித்த நிலைமையை வெளிப்படையாகக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
"அரசுப் பள்ளிகளை மேம்படுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நம்முடைய நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆதலால், இதுகுறித்த தகவல்களை அனைத்து மாநில அரசும் பொதுவெளியில் வெளியிட வேண்டும்.
கல்வி அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டிய 6 கேள்விகள்:
1) பள்ளிச் சீரமைப்பு: கடந்த ஐந்து ஆண்டுகளில், எத்தனை அரசுப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை பள்ளிகளுக்கு சீரமைப்பு அல்லது முழுமையான புதுப்பித்தல் தேவைப்படுகிறது?
2) ஆசிரியர் காலிப்பணியிடங்கள்: எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன, காலியாக உள்ள பணியிடங்கள் எத்தனை?
3) பள்ளிக்கான நிதி: கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு நிதி அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்டது, அதில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது?
4) பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்: மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட கூடுதலாக எத்தனை அரசுப் பள்ளிகள் தேவை?
5) கற்றல் அல்லாத வேலைகள்: மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதைத் தாண்டி, வேறு என்னென்ன கற்றல் அல்லாத வேலைகள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன?
6) அடிப்படை, டிஜிட்டல் வசதிகள்: எத்தனை அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குத் தேவையான கணினி, டிஜிட்டல் கற்றல் வசதிகள், சுத்தமான பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள், முறையான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் வசதிகள் இருக்கின்றன?
சமூக ஊடகங்களில் பரவும் சில வீடியோக்களில், குழந்தைகள் அடிப்படைத் தேவைகளான பாதுகாப்பான குடிநீர், பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகள், முறையான வகுப்பறை ஆகியவை இல்லாமல் பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுபோன்ற மோசமான நிலையில் குழந்தைகளைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது." என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே அக்கடிதத்தில் குறிப்பிட்டதாக அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.