இந்தியா

யுபிஐ மூலம் கல்வி கட்டணம் வசூல் – மத்திய அரசின் புதிய அறிவுறுத்தல்!

Staff Writer

பள்ளிகளில் கல்வி கட்டணங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், பள்ளிகளில் கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ. செல்போன் வாலட்டுகள், நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வெளிப்படை தன்மை உறுதி செய்யப்படும். பெற்றோருக்கு பணம் செலுத்துவது மிகவும் எளிதாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இனி பள்ளியில் சென்று பணம் கட்டடுவதற்கு தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் பண பரிமாற்றம் செய்ய மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் டிஜிட்டல் முறையில் கல்வி கட்டணம் செலுத்த மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.