பிரதமர் மோடி
பிரதமர் மோடி 
இந்தியா

காங்கிரஸின் கடை மூடப்படுகிறது! – நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு!

Staff Writer

“மீண்டும், மீண்டும் ராகுல் காந்தி எனும் ஒரே பொருள் விற்கப்படுவதால், காங்கிரஸின் கடை மூடப்படுகிறது.” என்று பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ஆம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். பிப்.1ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டுவருகிறது. நேற்று பிற்பகலில், மக்களவையில் பிரதமர் மோடி விவாதத்துக்குப் பதிலளித்துப் பேசினார். அவர் பேசியதிலிருந்து... :

”பட்ஜெட் கூட்டத்தொடர், ஆக்கப்பூர்வமான யோசனைகள் தெரிவிப்பதற்கு நல்ல வாய்ப்பு. கடந்த பத்து ஆண்டுகளாக நல்ல எதிர்க்கட்சியாக இருக்க காங்கிரசுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதை காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து, 1,000 ஆண்டுகளுக்கான திட்டங்களுக்கு அடித்தளமிடுவோம். தாங்கள் எதிர்க்கட்சிகளாகவே தொடர வேண்டும் என அவர்கள் எடுத்திருக்கும் இந்த தீர்க்கமான முடிவை, வரவேற்கிறேன்.

பல ஆண்டுகள் நீங்கள் இங்கு எதிர்க்கட்சியாக அமர்ந்திருந்ததுபோல, இனியும் இப்படியே அமர்ந்திருக்க மக்கள் ஆசி வழங்கட்டும். காங்கிரஸின் இந்த நிலைக்கு காங்கிரஸ்தான் காரணம். தன்னுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளை அவர்கள் வளரவிடவில்லை. இந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருப்பார்கள். மேலும், இந்தத் தேர்தலுடன் ஒரு குடும்பத்தின் அரசியல் காணாமல் போய்விடும்.

குடும்ப அரசியல் செய்வதால் மக்களின் தேவை எதிர்க்கட்சிகளின் கண்களுக்குத் தெரியவில்லை. ஜனநாயகத்துக்கு குடும்ப அரசியல் உகந்ததல்ல. காங்கிரஸின் செயல்பாடுகள் காங்கிரஸுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும், நாட்டிற்கும் பெரும் இழப்பு. இளம் எம்.பி-க்களின் சக்தியை காங்கிரஸ் வீணடிக்கிறது. எதிர்க்கட்சியில் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள் என யாரும் சிறுபான்மையினராகத் தெரியவில்லை.

இந்திய மக்களின் திறமையை நேருவும் இந்திராவும் நம்பவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் இருவரும் தடையாக இருந்தார்கள்.

மீண்டும், மீண்டும் ராகுல் காந்தி எனும் ஒரே பொருள் விற்கப்படுவதால், காங்கிரஸின் கடை மூடப்படுகிறது. ஒரு குடும்பம் கட்சியை நடத்துகிறது என்றால், அது குடும்ப அரசியல். அமித் ஷாவும், ராஜ்நாத் சிங்கும் கட்சி நடத்தவில்லை. எனவே, அவர்கள் குடும்ப அரசியல் செய்யவில்லை. எதிர்க்கட்சிகளைப் பார்த்துக் கேட்கிறேன், இன்னும் எவ்வளவு காலம்தான் சமூகத்தில் பிளவை ஏற்படுத்திக் கொண்டிருப்பீர்கள்?" என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார்.