எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட பிரியங்கா காந்தி 
இந்தியா

வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

Staff Writer

வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி. கேரளாவின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து, இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியவாறு பதவியேற்றுக்கொண்டார்.

அவர் பதவியேற்பதற்கு முன்னதாக, மக்களவைக்குள் நுழையும் முன்பே காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸின் செல்வாக்குமிக்க வயநாடு தொகுதியைத் தக்கவைக்கும் நோக்கில், ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை அக்கட்சி களமிறக்கியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், பிரியங்கா காந்தி, 4.10 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்பியாக பதவியேற்றார்.

பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram