ஜந்தர் மந்தர் - 2 போராட்டம் 
இந்தியா

சாரிசாரியாகக் கைது... ஜந்தர் மந்தர் - 2 போராட்டம் தொடங்கியது!

Staff Writer

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரைப் பதவி விலகக் கோரி இன்று தலைநகர் புதுதில்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி மறுத்த போலீஸ் அங்கு நோக்கிச் செல்ல முயன்ற நூற்றுக்கணக்கானவர்களைத் தடுத்துநிறுத்தியது.

மீறியவர்களைக் கைதுசெய்தது.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரின் சொல்படியும் அரசமைப்புக்குவிரோதமாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடந்துகொள்வதாகக் கூறி, அவரைப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி காந்தி பிறந்தநாளான இன்று நாடு முழுவதும் போராட்டம் தொடங்கப்படும் என கரப்பான் ஜனதா கட்சியினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று தில்லியிலும் போராட்டம் தொடங்கியது.

ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்லும் வழிகளில் பல அடுக்கு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். டோல்ஸ்டாய் மார்க், கேரளா பவன் ஆகிய பகுதிகளிலிருந்து போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் செல்வதற்கான பாதை தடுக்கப்பட்டுள்ளது. அசோகா சாலை அருகிலும் கூடுதல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

தில்லி போலீஸ், ரிசர்வ் படைகள், அதிவிரைப்படை, பிற துணை ராணுவப் படையினர் உட்பட்ட சுமார் 5,000 பாதுகாப்புப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அணுகு சாலைகளில் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கலவரத் தடுப்பு கருவிகள், டிரோன்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன.

தில்லி மெட்ரோவின் 11 நிலையங்களில் நுழைவு, வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளன.

ஜந்தர் மந்தர், நாடாளுமன்ற வீதி, டோல்ஸ்டாய் மார்க், கனாட் பிளேஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் சுற்றுவிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில், தடைகளைத் தாண்டி அப்பகுதிக்கு வந்து சேர்ந்த போராட்டக்காரர்கள், இடதுசாரி கட்சி, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், மாணவர்கள இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்படனர்.