கோல்ட்ரிப் மருந்து 
இந்தியா

எமனாக மாறிய இருமல் மருந்து: கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதித்த பஞ்சாப், இமாச்சல்!

Staff Writer

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், கோல்ட்ரிப் மருந்துக்கு பஞ்சாப், இம்மாச்சல் பிரதேச அரசுகள் விற்பனைக்கு தடைவிதித்துள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கோல்ட்ரிப் இருமல் மருந்தை குடித்த முதல் குழந்தை உயிரிழந்தது. அதைத் தொடர்ந்து, 15 நாள்களுக்குள் 5 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தன.

மத்திய பிரதேசத்தில் மட்டும் இருமல் குடித்து இதுவரை 14 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பின்னர் நடத்தப்பட்ட உடற்கூராய்வில், குழந்தைகளின் சிறுநீரகங்களில் டைஎதிலீன் கிளைகோல் இருப்பது கண்டறியப்பட்டது. இது நச்சுத்தன்மை அதிகம் கொண்டதாகும்.

விசாரணையில் அந்த குழந்தைகளுக்கு கோல்ட்ரிப் மற்றும் நெக்ஸ்ட்ரோ – டிஎஸ் சிரப்புகள் வழங்கப்பட்டது தெரியவந்தது. கோல்ட்ரிப் மருந்து தமிழ்நாட்டிலும், நெக்ஸ்டோ டிஎஸ் இம்மாச்சல் பிரதேசத்திலும் தயாரிக்கப்பட்டுகிறது.

கோல்ட்ரிப், காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசான் பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. கோல்ட்ரிப் மருந்தை தமிழ்நாடு மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் பரிசோதித்து பார்த்ததில் டைஎதிலீன் கிளைகோல் கலப்படம் இருப்பது தெரியவந்தது. இதுவே, மத்திய பிரதேச மாநிலத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்ததுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கோல்ட்ரிப் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது பஞ்சாப், இம்மாச்சலப் பிரதேசத்திலும் கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோல்ட்ரிப் சிரப்பில் டைஎதிலீன் கிளைகோல் 46.28 % இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நெக்ஸ்ட்ரோ – டிஎஸ் சிரப்பு இம்மாச்சலப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. அந்த மருந்தில் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என அம்மாநில அரசு நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இருந்தாலும், அந்த மருந்து விற்பனைக்கு தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.