நாட்டின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்றார்.
புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு பதவிப் பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்களும் பாஜக மூத்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
முக்கியமாக, குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து 53 நாள்களுக்குப் பிறகு முதல் முறையாக இந்த நிகழ்வில் கலந்து கொண்டதன் மூலம், பொதுவெளியில் தோன்றினார் ஜகதீப் தன்கர்.
முந்தைய துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக்குறைவால் கடந்த ஜூலை 21ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஏற்பட்ட காலிப் பதவிக்காக செப்டம்பர் 9ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பாஜகவின் என்டிஏ கூட்டணியைச் சார்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன், மற்றும் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கெடுப்பில், சுதர்சன் ரெட்டி 300 வாக்குகள் பெற்றார். அவரைவிட 152 வாக்குகள் அதிகமாக, 452 வாக்குகள் பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன், துணை ஜனாதிபதியாக வெற்றிபெற்றார். புதிய பொறுப்பை ஏற்கும் முன்னர், அவர் வகித்து வந்த மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பதவியிலிருந்து சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் 15ஆவது குடியரசுத் துணைத் தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.