சைபர் கிரைம் மோசடிகள் 
இந்தியா

11,000 கோடி ரூபாய் போயே போச்சு! இந்தியர்களைக் குறிவைக்கும் சைபர் மோசடி கும்பல்!

காப்பாத்திக்கணும்னா இதைச் செய்யுங்க முதலில்!

Staff Writer

சைபர் கிரைம் எனப்படும் ஆன் லைன் மோசடி செய்யும் கும்பல் பங்குச் சந்தையில் ஈடுபடுவோரைக் குறிவைத்து ஏமாற்றி வருகிறது. கடந்த 9 மாதங்களில் சுமார் 11000 கோடி ரூபாய் அளவுக்கு மக்கள் ஏமாந்துபோயிருக்கிறார்கள் என்று சொல்கிறார் பிரபல ஆன்லைன் பங்குசந்தை வர்த்தக செயலியான ஜெரோதாவின் தலைவர் நிதின் காமத்.

செய்தித்தாளில் வந்த கட்டுரை ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்:

பங்குச் சந்தையில் பயிற்சி அளிக்கிறோம்; அதன் பின்னர் நீங்கள் ஏராளமாக சம்பாதிக்கலாம்  என்று சொல்லி பெங்களூருவைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஒருவரை வாட்ஸப் லிங்க் மூலம் அணுகியது ஒரு கும்பல். அவரிடம் ஆரம்பத்தில் சர்வதேச ஏஐ ஸ்மார்ட் ட்ரேடிங் போட்டி நடக்கிறது அதற்கு ஓட்டு மட்டும் போடுங்கள் என அணுகி இருக்கிறார்கள்.  ஓட்டு போட்டால் உங்களுக்கு பங்கு சந்தை முதலீடு இலவச பயிற்சி, லாபம் வரும் டிப்ஸ் எல்லாம் எங்கள் நிபுணர்கள் தருவார்கள் என்று கூறி உள்ளனர்.

பின்னர் அவரை ஒரு டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர்.அதில் 74 பேர் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வழிகாட்டி டிப்ஸ் கொடுத்துள்ளார். இரண்டு செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைத்து அதில் ஒரு செயலிலில் முதலீடு செய்ய வைத்து இன்னொரு செயலியில் லாபம் வருகிற மாதிரி காட்டி உள்ளனர். இந்த கணக்கைப் பார்த்து நம்பிக்கை வந்திருக்கிறது. அதன்பின்னர் சுமார் 45 நாட்கள் அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்டு பணத்தை அவர் முதலீடு செய்துள்ளார். அதன் பிறகு போட்ட பணத்தை எடுக்க முடியாத நிலையில்தான் உஷார் ஆகி இருக்கிறார். இடையில் பங்குகள் வாங்க அவருக்கு கடன் கொடுக்கிறமாதிரியும் அதைத் திருப்பிக் கட்டவேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்கள். கடன்வாங்கி வாங்கிய பங்குகள் மூலம் கிடைத்த அதிக வருவாயை எடுக்க அவர் நினைத்தபோது, கடனைத் திருப்பிக் கட்டினால் எடுக்கலாம் என்றுள்ளனர். அவரும் திருப்பிக் கட்டினார். இப்படி அவர் போட்ட முதலீடு 91 லட்சம்.  பணத்தை எடுக்க 8% வரி கட்டவேண்டும் என்று திரும்பவும் பணம் கேட்டபோதுதான் அவர் உஷார் ஆகி, போலீசுக்குப் போயிருக்கிறார்.

இதே போல் சென்னையிலும் பல புகார்கள் பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எல்லாம் இதே போன்ற ஏமாற்று வேலைகள் தான். பிரபல பங்குச் சந்தை வர்த்தக நிறுவனங்களின் பெயரில் போலியான செயலிகளைச் செய்து ஏமாற்றி வருகிறார்கள்.

நிதின் காமத், ஜெரோதா தலைவர்

உங்கள் வாட்ஸப், டெலிகிராம் எண்களை புதியவர்கள் யாரும் உங்கள் அனுமதி இன்று எந்த குழுவிலும் சேர்க்க முடியாத மாதிரி செட்டிங்கை மாற்றி வைத்துக்கொள்ளுங்கள் என்று எக்ஸ் தளத்தில் ஆலோசனை கூறி உள்ளார் நிதின் காமத்.

இந்த பிராடுகள் ஏஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஆரம்பித்தால் என்னென்ன நடக்குமா என்று அச்சம் தெரிவித்துள்ளார் அவர்.