கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் 
இந்தியா

கர்நாடக மாணவர்களின் வருங்காலத்தைப் பாருங்கள் - சித்தராமையாவுக்கு தர்மேந்திர பிரதான் கண்டனம்

Staff Writer

தேசிய கல்விக் கொள்கையை கர்நாடகத்தில் செயல்படுத்த மாட்டோம் என அந்த மாநில அரசு அறிவித்திருப்பதற்கு, மைய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தில் அரசின் சாசனப்படி மாநில கல்விக் கொள்கையின் மூலம் பள்ளி, கல்லூரிகளில் கல்வி அளிக்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சித்ராமையா அண்மையில் அறிவித்தார். வரும் கல்வி ஆண்டு முதல் கர்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கை ரத்துசெய்யப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதுகுறித்து, புதுதில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மைய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடக அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தார்.

முதலமைச்சர் சித்ராமையாவுக்குப் பதிலளித்துப் பேசிய அவர், ” இந்த தேசிய கல்விக் கொள்கையானது 21ஆம் நூற்றாண்டுக்கான கல்வித் திட்டம். இது ஒன்றும் அரசியல் ரீதியான திட்டம் அல்ல. இந்த நூற்றாண்டில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பானது கல்வித் திட்டம் என்பதுடன், திறன் அடிப்படையில் கற்பிப்பதை இலக்காகக் கொண்டதும்கூட. கர்நாடகத்தின் இப்போதைய இளம் தலைமுறை மாணவர்களின் வருங்காலத்தோடு ஆளும் காங்கிரஸ் விளையாடக்கூடாது.” என்றார்.

மைய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையானது மாணவர் நலனுக்கு விரோதமானது என கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் குறைகூறியிருந்தார். அதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, ” சிறு பிள்ளைகள் திறம்பட எழுத்தறிவையும் எண்ணறிவையும் பெறுவது காங்கிரசுக்குப் பிடிக்கவில்லையா?” என்று கேட்டார்.

”இந்தியாவின் கற்பித்தல் முறையான பொம்மைகள்- விளையாட்டுகள் மூலமான கல்வி அறிவை, நம்முடைய குழந்தைகளுக்கு வழங்குவதை டி.கே. சிவக்குமார் எதிர்க்கிறார்; மேலும், கன்னடம், மற்ற இந்திய மொழிகளில் கல்வியை அளிப்பதற்கும் அவர் எதிர்ப்பைத் தெரிவிக்கிறார். நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் நடத்துவதையும் அவர் விரும்பவில்லையா? தில்லியில் உள்ள தம் கட்சி மேலிடத்தைத் திருப்திப்படுத்துவதற்காக கர்நாடக மாணவர்களுடைய நலனை சிவக்குமார் காவுகொடுக்கிறார்.” என்றும் தர்மேந்திர பிரதான் காட்டமாகக் கூறினார்.