விடுவிக்கப்பட்ட நேகா போரா 
இந்தியா

நேகா போரா கடத்தலா... அதிகாலையில் விடுவித்தது தில்லி போலீஸ்!

Staff Writer

அகில இந்திய மாணவா் சங்கத் தலைவா் நேகா போராவை நேற்று கைதுசெய்திருந்த தில்லி போலீசார், இன்று அதிகாலை விடுதலை செய்தனர்.

எஸ்.ஐ.ஆர். முறைகேடு குறித்தும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தில்லியில் மாணவர்கள் சங்கத்தினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தில்லி ஜந்தர் மந்தரில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக, கரப்பான் கட்சியின் நிர்வாகிகள் இருவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதை எதிர்த்து, தில்லி கன்னாட் பிளேசில் போராட்டம் நடத்த கரப்பான் கட்சியினர் திட்டமிட்டு இருந்தனர்.

கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே, அகில இந்திய மாணவா் சங்கத் தலைவா் நேகா போரா உட்பட்டோரை தில்லி காவல்துறை நேற்று தனித்தனியாகப் பிடித்துச்சென்றது.

நேகாவை போதைப்பொருள் தடுப்பு போலீசின் கருப்புக் கண்ணாடி வாகனத்தில் ஏற்றிய பின்னர், அவரின் இருப்பிடம் தெரியாமலேயே போலீஸ் அலைக்கழித்ததாக அவருடைய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

சிபிஐ கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆனி ராஜா உட்பட பலரும் நாடாளுமன்றத் தெரு காவல்நிலையத்தில் நேரில் சென்று விசாரித்ததை அடுத்து, போலீஸ் தரப்பில் ஒருவழியாக முறையான தகவலைத் தெரிவித்தனர்.

தில்லி காவல் சட்டத்தின் 65ஆவது பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் நேகா போரா வைக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டதையடுத்து இன்று அதிகாலை விடுவிக்கப்பட்டார் என்றும் தெரிவிக்கபப்ட்டது.

அதேபோல, கரப்பான் கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே மீது பி.என்.எஸ்.எஸ். 126, 170ஆவது பிரிவுகளின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அவர் இன்று பிற்பகல் சிறப்பு நிர்வாக நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram