மக்களவையில் கனிமொழி பேச்சு 
இந்தியா

மசோதாவை வாபஸ்பெறுங்கள்- மக்களவையில் கனிமொழி பேசியது என்ன?

Staff Writer

தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் கனிமொழி தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களவையில் இன்று பேசினார். அவரது உரையின் சுருக்கம்:

” அவையில் விவாதம் நடக்கும் போதே, அவசரமாக மசோதாவை அரசிதழில் வெளியிட்டது இந்த அவையை அவமதிக்கும் செயலாகும். தேர்தல்களைக் குலைக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மூன்று மசோதாக்களையும் எனது மாநிலத்தின் சார்பாகக் கடுமையாக எதிர்க்கிறேன்.

பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது போன்ற போர்வையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மூன்று மசோதாக்களும், இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று கூறித் தொடங்குகிறேன். முதலிலிருந்தே தொடங்குகிறேன், ஏனெனில் பொதுமக்களுக்கு வரலாறு தெரியாது என்பதைத்தான் இந்த அரசு எப்போதும் நம்பியிருக்கிறது. இந்தியாவில் தொகுதி மறுவரையறை வரலாறு என்பது ஒரு வாக்குறுதியின் வரலாறு - தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய தென்னிந்திய மாநில மக்களுக்கு நாடாளுமன்றம் அளித்த வாக்குறுதி அது. பாரதிய ஜனதா கட்சியின் ஆதிக்கத்தை எதிர்த்து நின்று, உள்ளடக்கிய வளர்ச்சிக்கு முன்மாதிரியாகத் திகழும் ஐந்து மாநிலங்கள் இவை.

தொகுதி மறுவரையறை நடைமுறை 1952-ல் குடியரசு உருவான உடனேயே தொடங்கியது. மக்கள் தொகை வளர்ச்சிக்கும் நியாயமான பிரதிநிதித்துவத்திற்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதற்கான அரசியலமைப்பு தீர்வாக இது அமைந்தது. நாம் அனைவரும் அரசியலமைப்பின் 82 மற்றும் 170-வது பிரிவுகளின் பரிந்துரைகளுக்குக் கட்டுப்பட்டோம். 1973-ல் மூன்றாவது தொகுதி மறுவரையறை ஆணையம் தனது பணியை முடித்தபோது, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டிற்கான அழுத்தம் இருந்தது. அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த தேசிய மக்கள் தொகைக் கொள்கை நாடு முழுவதும் கொண்டு வரப்பட்டது, அதனால் 1976-ல் தொகுதி மறுவரையறைக்கு முதல் முறையாகத் தடை விதிக்கப்பட்டது. இது 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 25 ஆண்டுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

1976-ல் அம்மையார் இந்திரா காந்தி அரசு 42-வது திருத்தத்தின் மூலம் மக்களவை இடங்களை 543 க்கு மேல் உயராமல் தடுத்தது வெறும் தொழில்நுட்ப முடிவல்ல. அது தென்னிந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட அரசியலமைப்பு வாக்குறுதி. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தினால் அரசியல் பிரதிநிதித்துவம் குறையாது என்ற அந்த உறுதிமொழியை ஏற்று, தென்மாநிலங்கள் கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடு செய்து மக்கள் தொகையைக் குறைத்தன. இந்த அநீதியைக் களைய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்துதான், 2001-ல் வாஜ்பாய் அரசு 84-வது திருத்தத்தின் மூலம் இந்தத் தடையை மேலும் 24 ஆண்டுகளுக்கு நீட்டித்தது. பாராட்டும் போது உங்களைப் பாராட்ட நாங்கள் என்றும் தயங்கியதில்லை.

இப்போது இடங்களின் எண்ணிக்கையை ஏன் 850 ஆக அதிகரிக்க வேண்டும்? எதன் அடிப்படையில்? மக்கள் தொகை அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிக்கோள் அறிக்கை கூறுகிறது, ஆனால் தொகுதி மறுவரையறை செய்ய 15 ஆண்டுகள் பழமையான 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். உங்களை நீங்களே முரண்படுத்திக் கொள்கிறீர்கள். 850 இடங்கள் இருந்தால், பெரும்பாலான எம்பிக்களுக்கு ஐந்து ஆண்டுகளில் இந்த நாடாளுமன்றத்தில் பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது.

தமிழ்நாட்டில் இரண்டு குழந்தைகளுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட ஒவ்வொரு குடும்பமும் நாட்டின் நலனுக்காக அரசு சொன்னதை நம்பியது. இன்று தமிழ்நாட்டின் கருவுறுதல் விகிதம் 1.6 ஆக உள்ளது. இது ஆஸ்திரேலியா, பிரான்ஸ், உங்கள் நண்பர் அமெரிக்காவை விடக் குறைவு. மனித மேம்பாட்டின் ஒவ்வொரு அளவுகோலிலும் தமிழ்நாடு ஒரு வெற்றிக் கதையாகத் திகழ்கிறது, இதைக் கண்டு நாடு பெருமைப்பட வேண்டும். ஆனால் அந்தத் தமிழ்நாட்டுக் குடும்பத்திடம் இந்த அரசு என்ன சொல்கிறது? "மன்னிக்கவும், நீங்கள் தவறான முடிவை எடுத்துவிட்டீர்கள். இந்த நாட்டின் மீது அக்கறை கொண்டு எங்களை மதித்து நடந்ததற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள், உங்கள் பிரதிநிதித்துவத்தை நாங்கள் குறைக்கப் போகிறோம்" என்று சொல்கிறது.

1971-லிருந்து உத்தரப் பிரதேச மக்கள் தொகை 120% அதிகரித்துள்ளது, ஆனால் தமிழ்நாடு 15% மட்டுமே அதிகரித்துள்ளது. மசோதாவின் பிரிவு 4, இடங்களின் ஒதுக்கீடு மக்கள் தொகை அடிப்படையிலேயே இருக்கும் எனத் தெளிவாகக் கூறுகிறது. ஆனால் உள்துறை அமைச்சரோ முரணான தகவலைத் தருகிறார். இப்போதைய கணக்கீட்டின்படி உ.பி 13 இடங்களைப் பெறுகிறது, தமிழ்நாடு 11 இடங்களை இழக்கிறது. இடங்களை அதிகரிப்பதன் மூலம் தமிழ்நாட்டிற்கு 59 இடங்கள் கிடைக்கும் எனச் சொல்வது ஏமாற்று வேலை. எங்களின் கொள்கை தலைவர் பெரியார் எங்களுக்குக் கற்பித்தது என்னவென்றால், நீதி என்பது ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரியானதை வழங்குவது அல்ல. நீதி என்பது ஒவ்வொருவருக்கும் என்ன தேவையோ, எதற்கு அவர்கள் தகுதியானவர்களோ அதை வழங்குவதுதான். கெடுவாய்ப்பாக, உங்கள் அரசாங்கம் தனக்கு என்ன தேவையோ அதுதான் முழு நாட்டிற்கும் தேவையானது என்று நினைக்கிறது.

இந்த மசோதாவில் இரண்டு முக்கிய சட்டச் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, எந்த மக்கள் தொகை கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது என்பதைப் பெரும்பான்மை பலத்தைக் கொண்டு அரசே தீர்மானிக்கும் வகையில் மசோதா தெளிவற்றதாக உள்ளது. இரண்டாவதாக, தொகுதி மறுவரையறை ஆணையத்தை மாநிலங்களையோ அல்லது தலைமை நீதிபதியையோ கலந்தாலோசிக்காமல் ஒன்றிய அரசே முழுமையாக நியமிக்கிறது. இதில் மாநிலப் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்கக் கூட அதிகாரம் இல்லை. வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியும்.

மேலும், இந்த ஆணையத்தின் முடிவை எந்த நீதிமன்றத்திலும் கேள்வி கேட்க முடியாது என்பது அச்சமளிக்கிறது. அரசியலமைப்பின் 368-வது பிரிவின்படி, மாநிலப் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் சட்டங்களுக்குப் பாதி மாநிலங்களின் ஒப்புதல் தேவை. இந்த மசோதா நியாயமானது என்று அரசுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் தமிழ்நாடு, கேரளா அல்லது கர்நாடக சட்டமன்றங்களின் முன் இதை வைக்கக்கூடாது? நீங்கள் உண்மையிலேயே 'கூட்டுறவுக் கூட்டாட்சியை' நம்பினால், ஏன் மாநில சட்டமன்றங்களை விட்டு ஓடுகிறீர்கள்? முதலமைச்சர்களிடம் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட நீங்கள் நடத்தவில்லையே?

பெண்கள் இடஒதுக்கீட்டை 2021 கணக்கெடுப்பிற்குப் பின் அமல்படுத்துவோம் என்று கூறிவிட்டு, இன்றுவரை கணக்கெடுப்பை நடத்தாமல் 2011 தரவுகளைப் பயன்படுத்தத் துடிப்பது ஏன்? கடந்த பத்து ஆண்டுகளாக மாநில முதலமைச்சர்களின் கோரிக்கைகளை மதிக்காத இந்த அரசுக்கு, தேர்தல் நேரத்தில் மட்டும் இவ்வளவு அவசரம் வருவது வெறும் அரசியல் நாடகம். ஒரு கணக்கெடுப்பைக் கூட நடத்த முடியாத உங்கள் தோல்வியையே அரசியல் ஆதாயமாக மாற்றப் பார்க்கிறீர்கள்.

இது அரசியலமைப்புச் சீர்திருத்தம் அல்ல, தேர்தலுக்கான ஒரு தந்திரம். தொகுதி மறுவரையறையுடன் பெண்கள் இடஒதுக்கீட்டை இணைப்பது ஒரு பொறி. தொகுதி மறுவரையறையை எதிர்த்தால் எங்களைப் பெண்களுக்கு எதிரானவர்கள் எனக் காட்ட பாஜக முயல்கிறது. பெண்களைத் தேர்தல் கேடயமாகப் பயன்படுத்துகிறது.

உங்களுக்கு உண்மையில் அக்கறை இருந்தால், தொகுதி மறுவரையறை நிபந்தனையை நீக்கிவிட்டு 2029-லேயே இடஒதுக்கீட்டை வழங்கலாமே? கையில் இருக்கும் ரொட்டித் துண்டை தராமல், எதிர்காலத்தில் பெரிய கேக் தருவோம் எனச் சொல்வது பெண்களை ஏமாற்றும் செயலாகும்.

அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு 2/3 பெரும்பான்மை தேவை என்பது, எந்தவொரு தனிப்பட்ட பிராந்தியமும் மற்றவர்களின் ஒப்புதலின்றி விதிகளை மாற்றக் கூடாது என்பதற்காகவே உருவாக்கப்பட்டது. ஆனால், இடங்களின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தினால், வட மாநிலங்கள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் பலம் மட்டுமே 400 இடங்களைத் தாண்டிவிடும்.

இதன் மூலம், தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் ஆதரவே இல்லாமல் அரசியலமைப்பைத் திருத்தும் அதிகாரம் உங்களுக்குக் கிடைத்துவிடும். தென்னிந்திய மாநிலங்களின் கூட்டுப் பேர வலிமையைக் குறைத்து, உங்கள் கொள்கைகளைத் திணிப்பதே இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம்.

குடியரசுத் தலைவர் தேர்தலிலும் மக்கள் தொகை அடிப்படையில் எம்.எல்.ஏ-க்களின் வாக்கு மதிப்பு மாறுவது, கூட்டாட்சி சமநிலையைப் பாதிக்கும். இந்த மசோதா மிகவும் குழப்பமானது. 2011 கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் இடங்கள் 32-ஆகக் குறையுமா, அல்லது இடங்கள் அதிகரிக்கப்பட்டால் 48 அல்லது 59 இடங்கள் கிடைக்குமா என்பதில் தெளிவு இல்லை. அவையில் அளிக்கப்படும் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்படுவதில்லை என்பதால், இந்த அரசின் வார்த்தைகளை எங்களால் நம்ப முடியவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் இந்த அநீதியை எதிர்க்க அனைத்துக் கட்சிக் குழுவை அமைத்துள்ளார். மாநிலங்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என்ற கோரிக்கையைப் பிரதமர் ஏற்கவில்லை. மாநிலங்கள் ஒன்றிய அரசின் ஏஜெண்டுகள் அல்ல, அவை சுதந்திரமான அரசியலமைப்பு அங்கங்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியுள்ளது.

திமுக எதிர்ப்பிற்காக எதிர்க்கவில்லை. தற்போதைய 543 இடங்களிலேயே பெண்கள் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தினால் நாங்கள் ஆதரிப்போம். 25 ஆண்டுகாலத் திட்டத்தை 48 மணி நேரத்தில் தீர்மானிக்காமல், மசோதாவைத் திரும்பப் பெற்று நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ஒப்படையுங்கள்.

கருப்பு என்பது எங்களின் அறிவுசார் தலைவர் பெரியார் கற்பித்த சுயமரியாதைப் போராட்டத்தின் அடையாளம். காளியின் நிறம்கூட இதுதான். மாநிலங்களின் உரிமையைப் பறிக்கும் இந்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம்.” என்று கனிமொழி பேசினார்.