ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் 
இந்தியா

“இந்து ராஷ்டிரம் யாருக்கும் எதிரானது இல்லை!” – மோகன் பகவத்

Staff Writer

“ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இந்து ராஷ்டிர கனவு யாருக்கும் எதிரானது அல்ல; யாரையும் ஒதுக்கி வைக்க நோக்கமும் இல்லை” என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழவையொட்டி, அந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, தில்லியில் ‘100 ஆண்டுகால ஆர்எஸ்எஸ் பயணம்: புதிய எல்லைகள்’ என்ற பெயரில் மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கத்தை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது: “நாம் இந்து ராஷ்டிரம் பற்றி பேசுவதால், யாரையும் ஒதுக்கவோ, எதிர்க்கவோ போகிறோம் என்று அர்த்தம் இல்லை. சங்கம் அப்படி இல்லை. சங்கம் எதிர்ப்பிலிருந்து பிறக்கவில்லை.” என்றவர், தொடர்ந்து பேசியதாவது,

“இந்து ராஷ்டிரம் என்ற சொல்லுக்கு அதிகாரத்துடன் எந்த தொடர்பும் இல்லை. இந்து ராஷ்டிரத்தின் முக்கியத்துவத்தை அறிந்தவர்கள் ஆட்சியில் இருந்தாலும் கூட அவர்கள் ஒரு மத நம்பிக்கையுடன் இருந்ததில்லை. அனைவருக்கும் சமமான நீதி உள்ளது. எந்த பாகுபாடும் இல்லை.

ஒரு இந்து, ஒரே கடவுளை நம்புவதில்லை. அவர் பல கடவுள்களை வணங்குவார். இந்து மதத்தில் 33 கோடி கடவுள்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு வேதமோ அல்லது ஒரு குருவோ இல்லை. பௌத்தர்கள், சமணர்கள், சைவர்கள் என பலர் இருந்தனர். இங்கு பல மதங்கள் இருந்தன. இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் இயல்பு இங்கு இருந்தது. இந்து என்பது அனைவரையும் உள்ளடக்கியது.

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அது வெறுப்பாக மாறக்கூடாது.” என்று பேசினார்.

இந்த கருத்தரங்கில் அரசியல் தலைவர்கள், நீதிபதிகள், சமூக சேவர்கள் என 1300 பேர் கலந்து கொண்டனர். சீனா, அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாடுகளை சார்ந்த ராஜதந்திரிகள் கலந்து கொண்டனர்.