மதுரா சுவாமிநாதன்
மதுரா சுவாமிநாதன் 
இந்தியா

விவசாயிகள் குற்றவாளிகள் அல்ல; உணவு அளிப்பவர்கள்! – மதுரா சுவாமிநாதன்

Staff Writer

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைக் குற்றவாளிகளாகக் கருத முடியாது என மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் மதுரா தெரிவித்துள்ளார்.

மறைந்த வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “விவசாயம், விவசாயிகள் நலனில் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததைக் கொண்டாடும்விதமாக நேற்று பீகாரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் விழா ஏற்பாடு செய்திருந்தது.

இந்த விழாவில் காணொலி மூலம் கலந்துகொண்ட மதுரா சுவாமிநாதன், “நம்முடைய விவசாயிகளை குற்றவாளிகளைப் போல நடத்தாதீர்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், அந்த நிகழ்வில் மதுரா சுவாமிநாதன் பேசியது:

“பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கிச் சென்று கொண்டுள்ளனர். அவர்களைத் தடுப்பதற்காக அரியானா உட்பட்ட எல்லைப் பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நமது விவசாயிகள், குற்றவாளிகள் அல்ல.

நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். குற்றவாளிகளைப் போல நடத்தக்கூடாது. பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும்.

எதிர்காலத்துக்காக நாம் எந்தவிதமான உக்திகளை வகுக்கிறோமோ, அதனுடன் நம்முடைய விவசாயிகளையும் ஒன்றுசேர்த்து அழைத்துச்செல்வதே, எம்.எஸ். சுவாமிநாதனுக்கு நாம் அளிக்கும் உண்மையான கௌரவம் என்று நான் கருதுகிறேன்.” என்று மதுரா பேசினார்.