மகனுடன் நாராயணன் பங்கல் 
இந்தியா

மகனுக்காக 800 கி.மீ. தூரம் காரை ஓட்டிய தந்தை... எதற்கு தெரியுமா?

Staff Writer

இண்டிகோ விமான சேவை பாதிப்பு பலரின் பயண திட்டங்களை கடுமையாகவே பாதித்திருக்கிறது. தனது மகன் முக்கிய தேர்வை தவறவிடக்கூடாது என்பதற்காக, அரியானாவைச் சேர்ந்த தந்தை ஒருவர், 800 கிலோமீட்டருக்கு இடைவிடாமல் கரை ஓட்டிய சம்பவம் நடந்துள்ளது.

அரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ் நாராயணன் பங்கல். இவரது மகன் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, டெல்லியில் பன்னிரண்டாம் வகுப்புக்கான ஃப்ரி போர்டு எக்ஸாம் எழுத இருந்தார். இதற்காக டிசம்பர் 6ஆம் தேதி மாலை, இந்தூர் - தில்லி இண்டிகோ விமான டிக்கெட்டை முன்பதிவு செய்திருந்தார் ராஜ் நாராயணன் பங்கல்.

கடந்த வாரம் முழுவதும் இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர் பயணம் செய்ய இருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. மாற்று விமான பயணமும் ஏற்பாடு செய்யப்படவில்லை. ரயிலில் செல்ல முயற்சித்தும் முடியவில்லை.

மகன் கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டுமென நினைத்த ராஜ் நாராயணன் பங்கல், தானே கார் ஓட்டிச் செல்ல முடிவு செய்தார்.

இதையடுத்து, அரியானாவில் இருந்து தில்லி வரை, சுமார் 800 கிலோ மீட்டர் தூரத்தை, 19 மணி நேரம் இடைவிடாமல் ஓட்டி சென்றார். பல பிரச்னைகளைக் கடந்து தேர்வு நேரத்துக்கு சில மணி நேரம் முன்பாகவே பாதுகாப்பாக சென்றடைந்தார். மகனும் தேர்வை வெற்றிகரமாக எழுதினார்.

இதுகுறித்து தந்தை கூறுகையில், 'விமானம் ரத்தான போது மகனின் எதிர்காலம் தான் எனக்கு மிகப்பெரியதாக தெரிந்தது. அது கையில் இருந்து நழுவி செல்லக்கூடாது என்பதற்காக இந்த பயணத்தை முடிவு செய்தேன்' என்றார்.

அவரது இந்த அர்ப்பணிப்பு சமூக ஊடகங்களில் பாராட்டை பெற்றாலும் இண்டிகோ விமான நிறுவனத்தை பலரும் விமர்சித்துள்ளனர்.