மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதியிடம் சைபர் கிரிமினல்கள் ரூ.6.02 லட்சம் மோசடி செய்திருப்பது பேசுபொருளாகியுள்ளது.
நாடு முழுவதும் சைபர் கிரிமினல்கள் தொடர்ந்து தங்களது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதில் முதியவர்கள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில் டிஜிட்டல் கைது மூலமும் இந்த மோசடி நடைபெறுகிறது.
இந்த மோசடி மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியையும் விட்டு வைக்கவில்லை. மும்பை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் பெண் ஒருவர் தனது கிரெடிட் கார்டில் தனக்கு கிடைத்த சன்மான பாயிண்ட்களை எப்படி பணமாக்குவது என்று தெரியாமல் இருந்தார்.
இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு போன் செய்து பார்த்தார். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து வாடிக்கையாளர் சேவை எண் இணையத்தில் கிடைக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இணையத்தில் தேடினார். இதில் ஒரு போன் நம்பர் கிடைத்தது. அந்த நம்பரில் அப்பெண் தொடர்பு கொண்டாரr
போனில் பேசிய நபர் அப்பெண் நீதிபதிக்கு வாட்ஸ்அப்பில் ஒரு பைல் அனுப்பினார். அந்த பைலை அப்பெண் நீதிபதியால், தனது ஐபோனில் திறக்க முடியவில்லை. இதையடுத்து ஆண்ட்ராய்டு போனில் சிம்கார்டு போட்டு பைலை திறக்கும்படி போனில் பேசிய நபர் கேட்டுக்கொண்டார்.
அப்பெண் நீதிபதியும் சிம்கார்டை கழற்றி ஆண்ட்ராய்டு போனில் போட்டு திறந்து பார்த்தார். அப்பெண் மர்ம நபர் அனுப்பிய பைலை திறந்தவுடன் அப்பெண் நீதிபதியின் சிம்கார்டில் இருந்த வங்கி விபரங்களை பயன்படுத்தி ரூ.6.02 லட்சத்தை மர்ம நபர் எடுத்துக்கொண்டார்.
இது தொடர்பாக அப்பெண் நீதிபதிக்கு மெசேஜ் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் நீதிபதி சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு தனது கிரெடிட் கார்டை தடை செய்யும்படி கேட்டுக்கொண்டார். மேலும் இது தொடர்பாக மும்பை சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சைபர் கிரிமினல்கள் நீதிபதியிடம் கைவரிசை காட்டி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.