இளநிலைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இனி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என கேரள அரசு பட்ஜெட்டில் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், நடந்துவரும் கேரள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக நேற்று (ஜனவரி 29) அம்மாநில, நிதியமைச்சர் கே.என். பாலகோபால் 2026-ஆம் ஆண்டுக்கான கேரளா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கலை - அறிவியல் இளநிலைப் படிப்புகளைப் பயிலும் மாணவர்கள் இனி கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, உயர்கல்வியில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவரும் முதல் மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது.
கல்வி வளர்ச்சிக்கு உதவும் வகையில் மேலும், பல திட்டங்களும் கேரள பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் விபத்துக் காப்பீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எச்டி அறிஞர்களுக்கான ஆதரவு மற்றும் பல்வேறு உதவித்தொகைகளுக்காக ரூ. 38.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக நடவடிக்கைகளை வலுப்படுத்த உயர்கல்வித் துறையின்கீழ் ரூ. 259.09 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், தொழிற்கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், 'குளோபல் ஸ்கூல்' ஒன்று நிறுவப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து, கல்வி கற்பதற்கு தங்குமிடம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகப் பொது விடுதி வசதி ஒன்றும் தொடங்கப்பட உள்ளதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி மட்டுமின்றி சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நலத்திட்டங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.