வெங்காயத்துக்கு இறுதிச்சடங்கு நடத்திய விவசாயிகள் 
இந்தியா

வெங்காயத்துக்கு இறுதிச்சடங்கு… கவனம் ஈர்த்த விவசாயிகளின் நூதன போராட்டம்!

Staff Writer

விலைச்சரிவால் விரக்தி அடைந்த விவசாயிகள் வெங்காயத்திற்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தின் தம்னார் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வுதான் இது. கிராமத்தில் உள்ள தகன மைதானத்தில் ஒரு பாடையில் வெங்காயத்தைக் கொட்டி, அதற்குப் பூமாலை போட்டு, மனிதருக்கு இறுதிச் சடங்கு செய்வது போல அனைத்து காரியங்களையும் செய்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் மால்வா மற்றும் நிமர் பகுதிகள் இந்தியாவின் வெங்காய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள விவசாயிகள், வெங்காயத்திற்குச் சரியான விலை கிடைக்காததால் இந்த நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். மண்டிகளில் வெங்காயம் கிலோவுக்கு 1 முதல் 10 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர். சிலர் 1 -2 ரூபாய்க்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நியாயமான விலை கிடைக்காததால் இந்த வெங்காய ஊர்வலம் நடத்தப்பட்டது.

இந்த நூதன போராட்டம் தொடர்பாகப் பேசிய விவசாயி, "வெங்காயம் எங்கள் குழந்தை போன்றது. இந்த விவசாயம் எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதி. அதிக கனமழையால் இரண்டாவது பயிரும் வீணானது. இப்போது வெங்காயமும் காய்ந்துவிட்டது. அதனால்தான் இறுதி ஊர்வலம் நடத்தினோம். எங்கள் செலவை ஈடுகட்டும் விலையைக்கூட அரசு வழங்கவில்லை" எனத் தெரிவித்தார்.

வெங்காயத்தின் மீதான நீண்டகால வரியால்தான் சர்வதேசச் சந்தைகளில் இந்தியா போட்டியிட முடியவில்லை எனவும், இதன் விளைவாக ஏற்றுமதி சரிந்து உள்நாட்டில் இருப்பு அதிகமாவதால், மண்டியில் குறைவான விலைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த இறுதி ஊர்வலம் வெறும் ஆரம்பம்தான் எனவும், நியாயமான விலை உறுதி செய்யப்படாவிடில் பிராந்தியம் முழுவதும் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.