ரயில் நிலையங்களில் உள்ள குடிநீரில் ஆபத்தான கிருமிகள் 
இந்தியா

குடிநீரில் அபாயக் கிருமிகள்... கோவை+ முக்கியமான ரயில் நிலையங்களில்!

Staff Writer

இந்தியாவில் கோவை உட்பட முக்கியமான இரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் குளிர்விப்பான்களில் ஆபத்தான கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியாவின் முக்கியமான இரயில் நிலையங்களில் உள்ள குடிநீர் கூலர்களில் 'இ-கோலி' எனும் வயிற்றுப் போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு இரயில்வேயின் கோவை, பாலக்காடு, மத்திய இரயில்வேயின் மும்பை சி.எஸ்.எம்.டி., பிவண்டி ரோடு, கல்யாண், லோனவாலா, தென்மத்திய ரயில்வேயின் ஐதராபாத் உட்பட்ட இரயில் நிலையங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

பரிசோதனையின் முடிவில், ஆபத்தான 'இ-கோலி' கிருமிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும், 512 முக்கிய இரயில் நிலையங்களில், 89% அதிகமான இரயில் நிலையங்களில் போதிய குடிநீர்க் குழாய்கள், இருக்கைகள், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை என்று மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்வேறு மண்டலங்களில் உள்ள இரயில் நிலையங்களில் குடிநீரின் தரத்தை முறையாகப் பரிசோதிக்கவும், குடிநீர் விநியோக அமைப்புகளை உடனடியாக ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் எனவும் இரயில்வே நிர்வாகத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, குடிநீர்க் குளிர்விப்பான்கள் உள்ள 20,000 இரயில் நிலையங்களில் குடிநீர்ச் சுத்திகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram