ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிராம பஞ்சாயத்து ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக அரசு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், அரசு ஊழியர்கள் யாரும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் தாலுகா ரோடலபண்டா கிராம பஞ்சாயத்தில், வளர்ச்சி அதிகாரியாக பிரவீன் குமார் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் லிங்கசுகூர் சட்டசபை தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மானப்பா வஜ்ஜலின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி லிங்கசுகூரில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பிரவீன்குமார், எம்எல்ஏ மானப்பா வஜ்ஜலுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் சீருடையில் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், இதுபற்றி விசாரணை நடத்திய பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் அருந்ததி சந்திரசேகர், அதிகாரி பிரவீன்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
கர்நாடக குடிமைப்பணி நடத்தை விதியை மீறியதாக அவர் மீது நடவடுக்கை பாய்ந்துள்ளது.
இந்த இடைநீக்கம் சட்டவிரோதமானது என்றும், இதை எதிர்த்து நீதிமன்றம் சொல்வோம் என்றும் அம்மாநில பாஜக இளைஞர் அணித்தலைவர் தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.