பிரதமர் மோடி 
இந்தியா

ஜிஎஸ்டி சீர்திருத்ததால் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் - பிரதமர் மோடி

Staff Writer

ஜிஎஸ்டி சீர்திருத்ததால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல் சரியாக மாலை 5 மணியளவில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் கூறியதாவது: “நாளை முதல் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமலுக்கு வருகின்றன. நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும். அவர்கள் விரும்பியதை வாங்கலாம். ஜிஎஸ்டி குறைப்பால் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.

ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், மகளிர், விவசாயிகள், இளைஞர்கள் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களை குறைக்கப்பட்ட விலையில் வாங்கலாம். இதனால், அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி நோக்கி முன்னேறும்.

சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை தகர்க்கவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டது. ஜிஎஸ்டிக்கு முன்பு வரி விதிப்பு விகிதம் சிக்கலானதாகவே இருந்தது. ஜிஎஸ்டி அமலாக்கம் இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம். ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டதன் மூலம் ஒரே நாடு ஒரே வரி என்ற கோடிக்கணக்கானோரின் கனவு நினைவானது.

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால், ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கத்தினராக தரம் உயர முடியும். சிறு, குறு வர்த்தக நிறுவனங்கள் பெருமளவில் பயனடைய முடியும். ஏன் சிறு கடைக்காரர் கூட பலனடையலாம். வருமான வரிச் சலுகை, ஜிஎஸ்டி குறைப்பால் மக்கள் 2.5 லட்சம் கோடி வரை மக்கள் செலவு குறைந்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பை நுகர்வோருக்கு கொண்டு செல்ல வியாபாரிகள் ஆர்வமாக உள்ளனர்

பொருட்களை முடிந்தவரை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும். அவை உலகத் தரம் மிக்கதாக இருக்க வேண்டும். இந்திய தயாரிப்புகளையே இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் நிலை வர வேண்டும். அப்போதுதான் சுய சார்பு இந்தியா இலக்கை எட்ட முடியும்.” இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.