முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன் 
இந்தியா

ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

Staff Writer

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14ஆவது முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 81 தொகுதிகளில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா 34 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 16, ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4, இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை) 2 இடங்களில் வெற்றி பெற்றன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, அனைத்து ஜாா்க்கண்ட் மாணவா் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) ஆகியவை தலா ஒரு தொகுதியைக் கைப்பற்றின.

இதையடுத்து, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி மீண்டும் தொடா்வது உறுதியானது.

ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.24) நடைபெற்றது. இதில் சட்டப்பேரவைக் குழு தலைவராக ஹேமந்த் சோரன் தோ்வு செய்யப்பட்டார்.

தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் சந்தோஷ் கங்வாரிடம் ஆட்சி அமைக்க ஹேமந்த் சோரன் உரிமை கோரினார். அவரும் பதவி ஏற்றுக் கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இன்று ராஞ்சியில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் சந்தோஷ் கங்குவார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, , மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

49 வயதாகும் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக 4ஆவது முறையாக இன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.