உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.40,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இப்போதே தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு இருப்பினும், அம்மாநில வாக்காளர்களைக் கவரும் முயற்சிகள் தற்போதே தொடங்கி விட்டன.
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கான அரசு உதவித் தொகையை உயர்த்தித் தருவதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், ‘‘பணத்தை எப்படிப் பரிமாற்றம் செய்வது, தேர்தலை எப்படி முறைகேடாக நடத்துவது என்பது குறித்து பாஜக தனது ஆட்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.
அதே ஆட்கள், உத்தரப் பிரதேசத்திற்கும் வந்து இங்கேயும் அதே முறைகேடுகளைச் செய்வார்கள். தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக எத்தகைய வியூகத்தை வகுத்தாலும், மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தா பானர்ஜியைத்தான் முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள்.
இப்போது எரிவாயு சிலிண்டர் கிடைப்பது என்பது தலைவிதியைப் பொறுத்த விஷயமாக ஆகிவிட்டது. உங்கள் தலைவிதியில் இருந்தால் அது உங்களுக்குக் கிடைக்கும்; இல்லையென்றால் நீங்கள் வரிசையில் நின்று காத்திருக்க வேண்டியதுதான்.
ஜான்சி நகரில் உள்ள ஒரு பாஜக தலைவர், ஒரு லாரி நிறைய சிலிண்டர்களைத் திருடி சிக்கியுள்ளார். எங்கெல்லாம் பாஜக ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் பெரும்பாலான பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். ஊழலும் உச்சக்கட்டத்தில் உள்ளது.
2027-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைக்கும்போது, ‘நாரி சம்ரித்தி யோஜனா’ திட்டத்தின் கீழ் பெண்களுக்கான அரசு உதவித் தொகை ஆண்டுக்கு ரூ.40,000 என உயர்த்தி வழங்கப்படும்.
உண்மையான அரசாங்கமும், உண்மையான வளர்ச்சியும் 2027-ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகுதான் வரும். தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து வாக்களிப்பதே இதற்குச் சரியான தீர்வாகும்’’ என தெரிவித்தார்.