விமான சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவானதையடுத்து விமான எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தவும், விமான நிறுவனங்களின் சுமையைக் குறைக்கவும் ரூ.10,000 கோடி நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் நெருக்கடிகளால் விமான எரிபொருள் விலை 2.5 மடங்கு வரை அதிகரித்துள்ளது. இதனால், விமான சேவையை குறைப்பதாக விமான நிறுவனங்கள் அறிவித்தது.
இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
எண்ணெய் சந்தை நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடி வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களுக்கு சீரான விலையில் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய சுழல் நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.75.6 ஆக நிர்ணயிக்கப்பட்டு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாகவும் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, இந்த நிதியானது திரும்ப வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம் விமான சேவைகள் தடையின்றி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.